எத்தனை நாள் தான் இந்தியாவில் ஷோரூம் இல்லாம இருப்பது... சென்னை இல்லை, முதல் ஷோரூம் எங்கே தெரியுமா?
பென்ட்லி (Bentley) நிறுவனம் தனது முதல் அதிகாரப்பூர்வ ஷோரூமை இந்தியாவில் இன்ஃபினிட்டி கார்ஸ் (Infinity Cars) நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இது பென்ட்லியின் இந்திய பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பிரிட்டிஷ் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி மோட்டார்ஸ் 1919ஆம் ஆண்டில் இருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் நிறுவனம் ஆகும். 1998ஆம் ஆண்டில் பிரபலமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) குழுமத்தில் இணைந்தது. இதன் காரணமாகவே, இந்தியாவில் செயல்படும் பென்ட்லி இந்தியா நிறுவனம் தனது செயல்பாடுகளை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL) நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.

கடந்த 2025 ஜூலை 1 முதல் அமலுக்குவந்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், பென்ட்லி கார்களின் இறக்குமதி மற்றும் விநியோகத்தை SAVWIPL கவனித்து வருகிறது. இந்தியாவில் வலுவான நிலையில் உள்ள ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பென்ட்லி கார்களை இந்தியாவில் சந்தைப்படுத்துவது மட்டுமின்றி, விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் வழங்கி வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்துதான் இந்தியாவில் பென்ட்லி நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமெடுக்க ஆரம்பித்தன என்றாலும், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகவே, இந்தியாவின் ஆடம்பர கார் சந்தையில் பென்ட்லி ஒரு அங்கமாக இருந்து வருகிறது. வாகனத் துறையில் சிறப்பம்சங்களை எதிர்பார்க்கும் உயர்தர வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பென்ட்லி பூர்த்தி செய்து வருகிறது.

இரண்டு தசாப்தங்களாக இறக்குமதி மூலம் செயல்பட்டு வந்த பென்ட்லி இந்தியா நிறுவனம், இப்போது ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியாவுடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக மார்க்கெட்டில் களமிறங்கி உள்ளது. அதன் வெளிப்பாடாக, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் பென்ட்லி நிறுவனம் தனது டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது.
இந்தியாவிலேயே செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் காஸ்ட்லீயான பகுதியாக கருதப்படும் மும்பையின் நாரிமன் பாயிண்டில், மெரைன் டிரைவ் (Marine Drive) பகுதிக்கு அருகில் திறக்கப்பட்டு உள்ள இந்தியாவின் முதல் பென்ட்லி ஷோரூம் (Showroom) ஆனது பென்ட்லியின் வடிவமைப்பு தத்துவத்தையும், தனித்துவமான கைவினைத்திறனையும் பிரதிபலிக்கிறது.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில், பென்ட்லியின் புகழ்பெற்ற கான்டினென்டல் ஜிடி (Continental GT), ஃபிளையிங் ஸ்பர் (Flying Spur) மற்றும் பென்டாய்கா (Bentayga) போன்ற கார்களை இனி ஆர்டர் (Order) செய்ய முடியும். கடந்த ஜூலையில் பென்ட்லி இந்தியாவின் பிராண்ட் இயக்குநராக அபே தாமஸ் (Abbey Thomas) நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவின் முதல் பென்ட்லி ஷோரூமில் இருந்தப்படி நிறுவனத்தை தலைமை தாங்குவார்.
மும்பையை தொடர்ந்து, பென்ட்லி இந்தியா நிறுவனம் அடுத்ததாக தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவிலும் விரைவில் ஷோரூம்களை திறக்க திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய ஷோரூம்கள் இந்தியாவின் மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்கு பென்ட்லியின் செயல்திறன், கைவினைத்திறன் மற்றும் ஆடம்பரத்தின் தனித்துவமான கலவையை வழங்கும். இது இந்திய ஆடம்பர கார் சந்தையில் பென்ட்லியின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தியா, உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். பென்ட்லி இந்தியா நிறுவனத்தைத் தொடங்குவது, இந்தியாவில் ஏற்கனவே வலுவான மற்றும் வளர்ந்து வரும் உயர் நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர் தளத்தில் பென்ட்லியின் வளர்ச்சி மீதான கவனத்தை பிரதிபலிக்கிறது. இந்த கூட்டணியை கொண்டு வந்த SAVWIPL குழுவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று பென்ட்லி மோட்டார்ஸின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்திய இயக்குனர் ரிச்சர்ட் லியோபோல்ட் கடந்த ஜூலை மாதத்திலேயே கருத்து தெரிவித்து இருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் SAVWIPL இன் கீழ் புதிய அத்தியாயத்திற்கு பென்ட்லி இந்தியா தயாராகி வருகிறது. அதன் முதல் முயற்சியே இந்தியாவில் முதல் பென்ட்லி டீலர்ஷிப் ஷோரூம் திறக்கப்பட்டு இருப்பதாகும். மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் பென்ட்லி ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளதாக கடந்த ஜூலை மாதத்திலேயே தெரிவிக்கப்பட்டு இருந்ததால், மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியை தொடர்ந்து, மிக விரைவில் டெல்லி மற்றும் பெங்களூருவிலும் பெண்ட்லி ஷோரூம்கள் திறக்கப்படும்.


Click it and Unblock the Notifications









