10 லட்ச ரூபாய் கூட விலை கிடையாது! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களை யார் வேண்டாம்னு சொல்லுவாங்க?
என்சிஏபி (NCAP) மோதல் சோதனைகளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் கார்களை பல்வேறு விதமான மோதல்களுக்கு உட்படுத்தி, அவற்றின் பாதுகாப்பு தரம் என்ன என்பதை பொறுத்து மதிப்பீட்டை வழங்கும் அமைப்புதான் என்சிஏபி ஆகும். பல்வேறு விதமான அமைப்புகளால் நடத்தப்படும் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5க்கு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று, ரூ.10 லட்சத்திற்குள் விற்பனை செய்யப்படும் கார்களை பற்றி இனி பார்க்கலாம்.
டாடா பஞ்ச்: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் அளவில் சிறியதான எஸ்யூவி (SUV) ரக கார். அதற்கேற்ப விலை குறைவானதாக உள்ளதால், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான மக்கள் பஞ்ச் கார்களை வாங்குகின்றனர். குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் தொடர்சியாக மூன்று மாதங்களாக இந்தியாவிலேயே அதிக பேரால் வாங்கப்பட்ட காராக பஞ்ச் முதலிடத்தை பிடித்தது.

இதற்கு மற்றொரு காரணம், பஞ்ச் ஆனது டாடா மோட்டார்ஸின் பாதுகாப்புமிக்க கார் ஆகும். குளோபல் (Global) என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களும், சிறியவர்கள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களும் குளோபல் என்சிஏபி-இல் பஞ்ச் காருக்கு வழங்கப்பட்டன.
டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா கார்கள் என்றாலே பாதுகாப்பு மிக்கவை என்பதற்கு இணங்க, இந்த வரிசையில் மற்றுமொரு டாடா காராக அல்ட்ராஸ் உள்ளது. சற்று தாழ்வான உடலமைப்பை கொண்ட ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான அல்ட்ராஸின் சில வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவும், சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாகவும் உள்ளன.

பஞ்ச் காரை போன்று, குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை அல்ட்ராஸ் பெற்றுள்ளது. இந்த டாடா காரும் குழந்தைகள் பாதுகாப்பில் 5க்கு 4 நட்சத்திரங்களையே பெற்றுள்ளது. இருப்பினும், இந்தியாவின் பாதுகாப்புமிக்க ஹேட்ச்பேக் காராக அல்ட்ராஸ் விளங்குகிறது.
டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்த வரிசையில் மற்றுமொரு டாடா கார். அல்ட்ராஸை போன்று நெக்ஸானின் சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவும், சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகவும் உள்ளன. பஞ்ச் காரை காட்டிலும் அளவில் சற்று பெரியதான சப்-காம்பெக்ட் (Sub-Compact) எஸ்யூவி காராக நெக்ஸான் விளங்குகிறது.

இந்தியாவில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற முதல் கார்களுள் நெக்ஸானும் ஒன்றாகும். 2019ஆம் ஆண்டிலேயே குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியதால்தான் அதன்பின் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை சிறப்பாக இருந்தது. மேலும், இந்தியாவில் மக்கள் கார்களின் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் ரேட்டிங்கை பார்த்து கார் வாங்கும் பழக்கம் உருவானதும் நெக்ஸானில் தான் ஆகும்.
மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாதந்தோறும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியமான காராக டிசைர் உள்ளது. மாருதி சுஸுகியின் காம்பெக்ட்டான செடான் (Sedan) ரக காராக விளங்கும் டிசைர் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என இரண்டிலும் உட்படுத்தப்பட்ட டிசைர் காருக்கு இரண்டிலும் 5க்கு 5 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாரத் என்சிஏபி-இல் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 29.46 மதிப்பெண்களை தற்சமயம் விற்பனையில் இருக்கும் டிசைர் கார் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் மைலேஜும் முக்கியம் தான் என்றாலும், அதனை காட்டிலும் முக்கியமானது பயணிகளின் பாதுகாப்பு ஆகும். எல்லா கார்களும் பாதுகாப்பானவை ஆக தான் உருவாக்கப்படுகின்றன என்றாலும், உற்பத்தி செலவு வேறுப்படுவதால், அதற்கேற்ப கார்களின் பாதுகாப்பு தரமும் வேறுப்படுகின்றன. ஆதலால், ஒவ்வொரு காரின் பாதுகாப்பு தரமும் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய பாரத் என்சிஏபி மற்றும் குளோபல் என்சிஏபி உள்ளிட்ட அமைப்புகளின் சோதனை முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









