கார்களில் இந்த வசதி இருக்குறதே சிலருக்கு தெரியாது! 10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கினாலும் இருக்கும்!
வாகன ஓட்டிகளுக்கு வசதி, பாதுகாப்பு, மற்றும் சிறந்த சாலை பார்வையை வழங்கும் வகையில், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் மெக்கானிசம் வழங்கப்படுகிறது. இப்படியொரு வசதி இருப்பது சில கார் ஓட்டிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். இது ஸ்டீயரிங் சக்கரத்தின் நிலையை மாற்றியமைக்க உதவுகிறது. பொதுவாக, ஸ்டீயரிங் சக்கர அமைப்பில் சக்கரத்தின் உயரத்தை (சாய்வு) மற்றும் ஓட்டுநரிடமிருந்து அதன் தூரத்தை (டெலஸ்கோப்) சரிசெய்ய முடியும்.
இதை ஒரு லீவர், ராட்செட் அல்லது மின்னணு அமைப்புகள் மூலம் செய்ய முடியும். இந்தியாவில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில், பல நவீன கார்களில் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட் வசதி உள்ளது. குறிப்பாக உயர் ரக கார்களில் இது ஒரு பொதுவான அம்சமாக இருக்கிறது. அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதியுடன், மற்ற விரும்பத்தக்க அம்சங்களையும் வழங்கும் சில சிறந்த கார்களை இங்கு காணலாம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்: இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதி உண்டு. ஆறு ஏர்பேக்குகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

ஹூண்டாய் ஐ20: 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஐ20 காரின் உயர் ரக கார்களில் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட் வசதி உள்ளது. 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஆறு ஏர்பேக்குகளும் இந்த காரில் அடங்கும். ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா போன்ற இந்த காரின் பல வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கின்றன.

டாடா அல்ட்ராஸ்: பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த டாடா காரிலும் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதி உள்ளது. ஐந்து நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த காரில், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கேபினை சுற்றிலும் வண்ண விளக்குகள் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் போன்ற அம்சங்கள் உயர் ரக வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன. இதன் பல வேரியண்ட்களை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம்.

டாடா பன்ச்: பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் பன்ச் காரின் பெரும்பாலான வேரியண்ட்களில் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதி உள்ளது. பயணிகளின் பாதுகாப்பில் ஐந்து நட்சத்திர குளோபல் NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ள பன்ச் காரில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. சிஎன்ஜி வேரியண்ட்கள் உட்பட இந்த டாடா காரின் பல வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வரும் இந்த மஹிந்திரா கார், டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் சக்கரத்துடன் கிடைக்கிறது. லெவல்-2 ADAS, பனோரமிக் சன்ரூஃப், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் இடம்பெறுகின்றன. அத்தகைய வேரியண்ட்களுள் ஒன்றான எம்.எக்ஸ்2 புரோ போன்ற சில வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் வருகின்றன.

நிசான் மேக்னைட்: நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் மேக்னைட் காரின் உயர் ரக வேரியண்ட்களில் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதி உள்ளது. இதனுடன், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் இணைப்புடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களும் இந்த காரில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி டிசையர்: எரிபொருள் சிக்கனமான 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜினில் இயக்கப்படும் இந்த செடான் காரில் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதி உள்ளது. விசாலமான மற்றும் வசதியான கேபினுக்கு பெயர் பெற்ற டிசையர் காரில் 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இதன், வி.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ போன்ற பல வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கின்றன.

ஹோண்டா அமேஸ்: 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த ஹோண்டா செடான் காரில் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதி உள்ளது. விசாலமான கேபின் மற்றும் பெரிய பூட் ஸ்பேஸ் உடன் ரூ.10 லட்சத்திற்குள் வரும் அமேஸ் காரின் விஎக்ஸ் வேரியண்ட்டில் இணைப்பு வசதிகளுடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது.

ரெனால்ட் டிரைபர்: பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் டிரைபரின் உயர் ரக வேரியண்ட்களில் டில்ட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வசதி உள்ளது. சந்தையில் மிகவும் மலிவு விலையிலான 7-சீட்டர் காரான இது, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வென்ட்களை வழங்குகிறது. இதன் பல வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்கால வாகனங்களில், ஓட்டுனரின் சவுகரியத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டோமேட்டிக் ஓட்டுநர் தொழில்நுட்பங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால், ஸ்டீயரிங் சக்கரத்தை மொத்தமாக மடக்கி வைக்கும் (stowable) வசதி பற்றிய ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், குறைந்தப்பட்சம் ஸ்டீயரிங் சக்கரத்தை தனது விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளும் வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் இதில் ஒரு காரை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









