இந்த மாதிரி ஹெட்லைட்கள் தான் நமக்கும், எதிரில் வருபவர்களுக்கும் பிரச்சனை இல்ல! 10 லட்ச ரூபாய் கார்களிலும்...
காரில் தன்னிச்சையாக இயங்கக்கூடிய ஹெட்லேம்ப்கள் (Automatic Headlamps) காரின் வெளிப்புற சுற்றுச்சூழலின் ஒளியை பொறுத்து வெளிச்சத்தை வெளியிடுபவை ஆகும். இதற்காக காரில் வழங்கப்படும் சென்சார்கள் மூலம் இந்த ஹெட்லேம்ப்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல ஹேட்ச்பேக் மற்றும் மைக்ரோ-எஸ்யூவி கார்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதி தற்போது வழங்கப்படுகிறது.
இந்த வசதி பெரும்பாலும் காரின் டாப்-எண்ட் வேரியண்ட்களில் இடம்பெறுகிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளன. நகரப் பயணங்களுக்கு ஏற்ற மென்மையான மற்றும் திறமையான டிரைவிங் அனுபவத்தை இது வழங்குகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai i10 NIOS), ஹூண்டாயின் விலை குறைவான கார்களில் இதுவும் ஒன்று. கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் டாப்-எண்ட் அஸ்டா வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் புரோஜெக்டர் ஹெட்லேம்ப் வசதி உள்ளது. அத்துடன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இந்த ஹூண்டாய் காரில் இடம்பெறுகின்றன.
மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), மாருதி நிறுவனத்தின் சற்று விலைமிக்க பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார் இதுவாகும். மாருதியின் பிரீமியம் கார்கள் விற்பனை செய்யப்படும் NEXA டீலர்ஷிப்கள் மூலம் விற்கப்படும் பலேனோ, அதன் டாப்-எண்ட் ஆல்ஃபா வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்களைக் கொண்டுள்ளது.

டொயோட்டா கிளான்சா (Toyota Glanza), பலேனோவின் மறுவடிவமைக்கப்பட்ட மாடல் இது ஆகும். அதாவது, பலேனோவை அடிப்படையாக கொண்டு டொயோட்டா உருவாக்கிக் கொண்ட கார், கிளான்சா ஆகும். இதன் அடிப்படை வேரியண்ட்டில் இருந்தே ஆட்டோமேட்டிக் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் உள்ள மற்றொரு காரான மாருதி சுஸுகி இக்னிஸ், ஒரு மைக்ரோ-எஸ்யூவி போன்ற ஹேட்ச்பேக் கார் ஆகும்.
இதன் டாப்-எண்ட் ஆல்ஃபா வேரியண்ட்டில் தானியங்கி எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. விற்பனை பெரியதாக இல்லையென்றாலும், இந்த கார் நகர்ப்புறச் சாலைகளில் பயணம் செய்ய ஏற்றதாக உள்ளது. டாடா பன்ச் (Tata Punch), அதிக வரவேற்பைப் பெற்றுவரும் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் உயர் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் புரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் (DRL) வழங்கப்படுகின்றன.

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் உடன், "ஃபாலோ மீ ஹோம்" வசதியும் இதில் உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter), ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் சிறிய அளவிலான கார்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதி வழங்கப்படுகிறது. மேலும், ஆறு ஏர்பேக்குகள், சன்ரூஃப் போன்ற பிற அம்சங்களும் இந்த காரில் இடம்பெறுகின்றன.
நிசான் மேக்னைட் (Hyundai Magnite), இந்த காம்பாக்ட் எஸ்யூவி காரின் உயர்-நிலை வேரியண்ட்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதி உள்ளது. இது ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலையில் கிடைக்கிறது. ஹோண்டா அமேஸ் (Honda Amaze), காம்பாக்ட் செடான் காரான இந்த ஹோண்டா காரின் டாப்-எண்ட் வி.எக்ஸ் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் இடம்பெறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் காருக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குவது மட்டுமின்றி, முக்கியமான பாதுகாப்பு அம்சமாக விளங்குகின்றன. ஏனெனில், அதிகப்படியான வெளிச்சமும் எதிரில் வரும் வாகனங்களுக்கு பல நேரங்களில் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தகைய வசதி கொண்ட கார்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன என்பது சிறப்பான விஷயமாகும்.


Click it and Unblock the Notifications









