10 லட்ச ரூபாயில் கார் வாங்கும்போது இந்த வசதி இருக்கானு கேட்டு வாங்குங்க! பலருக்கு இது தெரிவதே இல்ல!
இன்றைய கால மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டுவரும் அதிநவீன அம்சங்களுள் ஒன்று, கனெக்டட் கார் தொழிற்நுட்பம் (Connected Car Technology) ஆகும். கார் எந்த இடத்தில் உள்ளது என்பதை நேரலையில் தெரிந்துக் கொள்வதுடன், காரில் ஏற்படும் பிரச்சனைகளையும் இருக்கும் இடத்தில் இருந்தே தெரிந்துக் கொள்ளவும் கனெக்டட் கார் வசதிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
அத்துடன், குறிப்பிட்ட தொலைவில் இருந்து மொபைல் போன் (Mobile Phone) மூலமாகவே காரை கண்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் காரில் பயணிக்கும் போது குரல் மூலமாக ஏசி, இருக்கை உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்யும் வசதிகளுக்கும் கனெக்டட் கார் வசதிகள் வழிவகை செய்கின்றன. இத்தகைய கனெக்டட் கார் தொழிற்நுட்பத்துடன் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே விற்பனைக்கு கிடைக்கும் கார்களை இனி பார்க்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் நிறுவனத்தின் அளவில் சிறியதான எஸ்யூவி (SUV) ரக காராக சில வருடங்களுக்கு முன்னர்தான் எக்ஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அளவில் சிறியதாக உருவாக்கப்படுவதால், அதற்கேற்ப எக்ஸ்டர் காரின் விலைகளும் குறைவானதாகவே நிர்ணயிக்கப்படுகின்றன. இத்தகைய எக்ஸ்டர் காரில் கனெக்டட் கார் வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எஸ்.எக்ஸ் (SX) வேரியண்ட்டில் இருந்து கனெக்டட் கார் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனை ஹூண்டாய் நிறுவனம் தனது தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்குகிறது. எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே இருப்பதால், 10 லட்ச ரூபாய்க்குள் எக்ஸ்டரில் கனெக்டட் கார் வசதிகளை பெறலாம்.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): எக்ஸ்டருக்கு அடுத்து ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கும் சற்று அளவில் பெரியதான எஸ்யூவி கார், வென்யூ ஆகும். ஹூண்டாயின் சப்-காம்பெக்ட் (Sub-Compact) எஸ்யூவி காராக விளங்கும் வென்யூ ஆனது இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக உள்ளது.
இத்தகைய வென்யூ காரிலும் கனெக்டட் கார் வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்குகிறது. வென்யூ காரின் எஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்து இந்த அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. அதாவது, வென்யூ காரில் சில எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் மற்றும் மிட்-வேரியண்ட்களில் இருந்தே கனெக்டட் கார் வசதிகளை பெறலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த அளவிற்கு இந்த லேட்டஸ்ட் மஹிந்திரா காரின் தோற்றம் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இத்தகைய எஸ்யூவி காரில் 'அட்ரெனாக்ஸ் கனெக்டட் கார் தொழிற்நுட்பம்' என்கிற பெயரில் கனெக்டட் கார் வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் எம்.எக்ஸ்3 (MX3) வேரியண்ட்டில் இருந்து கனெக்டட் கார் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. எம்.எக்ஸ்3 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.74 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கனெக்டட் கார் தொழிற்நுட்பங்கள் ஒவ்வொரு கார் நிறுவனத்தாலும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு 'இசட் கனெக்ட்', 'யுவோ கனெக்ட்', 'ஐ-ஸ்மார்ட்' உள்ளிட்ட பெயர்களை சொல்லலாம். அதற்கேற்ப, கனெக்டட் கார் வசதிகளில் இடம்பெறும் வசதிகளும் காருக்கு கார் சற்று வேறுப்படுகின்றன.
ஆதலால், ரூ.10 லட்சத்திற்குள் மேற்கூறப்பட்ட கார்களை வாங்கும்போது கனெக்டட் கார் வசதிகளில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்று உள்ளன என்பதை அறிவது அவசியமாகும். இதற்கு நீங்கள் தகுந்த டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு தான் செல்ல வேண்டும் என்றில்லை, கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களையும் ஆராயலாம்.


Click it and Unblock the Notifications









