நம்ம ஊருக்கு இப்படிப்பட்ட கார்களை வாங்காமல் நிறைய பேர் கஷ்டப்படுறாங்க! 10 லட்ச ரூபாயில் கிடைக்குது!
இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில கார் மாடல்களில், குளிரூட்டப்பட்ட கையுறை பெட்டி (Cooled Glovebox) வசதி விலைமிக்க டாப் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. வாட்டர் பாட்டில்கள் (Water Bottles), குளிர்பானங்கள் மற்றும் பிற பொருட்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் இந்த அம்சம் ஒரு மினி குளிர்சாதன பெட்டி (Refrigerator) போன்று செயல்படுகிறது. ஹூண்டாய், டாடா மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்களின் குறிப்பிட்ட கார்களில் இது காணப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): இந்த தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார், அதன் பிரிவில் உயர்தர உட்புற வடிவமைப்பிற்கும், அதிக வசதிகளுக்கும் பெயர் பெற்றது. இதன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா வேரியண்ட்களில் கூல்டு க்ளோவ்பாக்ஸ் வருகிறது. இது இந்த ஹூண்டாய் காரில் குளிர்பானங்களை வைக்க வசதியான இடத்தை வழங்குகிறது.

டாடா அல்ட்ரோஸ் (Tata Altroz): கிராண்ட் ஐ10 நியோஸ் காரை காட்டிலும் சற்று விலைமிக்க அல்ட்ரோஸ் ஒரு பிரீமியம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த டாடா ஹேட்ச்பேக் கார் ஆகும். இதன் கிரியேட்டிவ் (Creative) வேரியண்ட்களில் கூல்டு க்ளோவ்பாக்ஸ் வசதியுள்ளது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ரோஸ், 5-நட்சத்திர பாரத் என்சிஏபி (Bharat NCAP) பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

டாடா பன்ச் (Tata Punch): இந்த மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) ரக கார், அதன் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டிற்காக அறியப்படுகிறது. இதிலிலும், உயர்தர கிரியேட்டிவ் வேரியண்ட்களில் கூல்டு க்ளோவ்பாக்ஸ் கிடைக்கிறது. இது அளவில் சிறியதான எஸ்யூவி ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்ப்போருக்கு ஏற்றதாக உள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): மேலே கண்ட டாடா பன்ச் காருக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது. இதன் டாப் வேரியண்ட்களில், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட டாஷ்கேம் (Dashcam) மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் பியூர் (Pure) மற்றும் கிரியேட்டிவ் (Creative) உட்பட சில வேரியண்ட்களில் கூல்டு க்ளோவ்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளன. நெக்ஸானும் குளோபல் என்சிஏபி (Global NCAP)-இல் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): ரெனால்ட் கைகர், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட, தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த சப்-காம்பாக்ட் (Sub-Compact) எஸ்யூவி கார் ஆகும். இதன் டாப் வேரியண்ட்களில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங்குடன், கூல்டு க்ளோவ்பாக்ஸ் கிடைக்கிறது. டாப் வேரியண்ட்களாக இருப்பினும், இவற்றின் விலைகளும் ரூ.10 லட்சத்திற்குள் உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (XUV300) காரின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பான இந்த காம்பாக்ட் எஸ்யூவியின், பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் வரும் ஏ.எக்ஸ்5 (AX5) போன்ற சில வேரியண்ட்கள் கூல்டு க்ளோவ்பாக்ஸ் உடன் வருகின்றன.

டாடா டிகோர் (Tata Tigor): டாடா டியாகோ (Tata Tiago) காரின் காம்பாக்ட் செடான் (Compact Sedan) வெர்சனான டிகோரின் டாப் வேரியண்ட்களில் கூல்டு க்ளோவ்பாக்ஸை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 4-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற டிகோர் காரில் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq): சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடாவின் புதிய காம்பாக்ட் எஸ்யூவியான கைலாக், சில வேரியண்ட்களில் பிற பிரீமியம் அம்சங்களுடன், கூல்டு க்ளோவ்பாக்ஸையும் கொண்டுள்ளது. மாடர்ன் ஸ்கோடா கார் என்பதாலேயே பல அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்ததாக கைலாக் விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்பமான நாட்டில் கார்களில் கூல்டு க்ளோவ்பாக்ஸ் மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஏனெனில், பொதுவாகவே காருக்குள் ஏசி போட்டிருந்தாலும் குளிர்ச்சியான பொருட்கள் வெப்பமடையும். அப்படியிருக்க, சூடான சாலையில் இயங்கும்போது காருக்குள் குளிர்ச்சியான பொருட்கள் விரைவாகவே தங்களது குளிர்ச்சியை இழக்க துவங்கும்.


Click it and Unblock the Notifications









