காரில் இந்த விளக்கு இல்லாம தான் சிலர் தவிக்குறாங்க! 10 லட்ச ரூபாய்க்கு உள்ளாகவே மார்க்கெட்டில் இத்தனை கார்களா!
கார்னரிங் விளக்குகள் என்பவை, கார்களின் முகப்பு விளக்குகள் அல்லது ஃபாக் விளக்குகளுடன் இணைக்கப்படும் துணை விளக்குகளாகும். இவை தானாகவே செயல்பட்டு, கார் திரும்பும் திசையில் ஒளியைப் பாய்ச்சி, பார்வைக்குத் தெரியாத பகுதிகளை மேம்படுத்த உதவுகின்றன. குறைந்த வேகத்தில் பயணிக்கும் போதும், ஓட்டுநர் ஸ்டீயரிங் சக்கரத்தைத் திருப்பும் போதும் அல்லது டர்ன் இண்டிகேட்டர் சிக்னலை பயன்படுத்தும் போதும் இந்த விளக்குகள் இயங்குகின்றன.
இதன் மூலம், வாகனம் திரும்பும் திசையில் கூடுதல் வெளிச்சம் கிடைத்து, திருப்பங்களில் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்கு உதவுகிறது. இந்தியாவில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் கார்னரிங் விளக்குகளுடன் பல கார்கள் கிடைக்கின்றன. ஹூண்டாய் எக்ஸ்டர், டாடா அல்ட்ராஸ் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவை இவற்றில் பிரபலமான மாடல்களாகும். இந்த அம்சம் இரவில் வளைவுகளில் திரும்பும்போது சிறந்த பார்வைத்திறனையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார், பிரீமியம் ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்தது. இது குளோபல் NCAP பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பாதுகாப்பான, ஸ்டைலான காரில் கார்னரிங் விளக்குகளை விரும்புபவர்களுக்கு அல்ட்ராஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.30 லட்சத்தில் இருந்து ரூ.10.51 லட்சம் வரை உள்ளன.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) அதன் சிறப்பம்சங்கள் நிறைந்த கேபினுக்காக அறியப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அல்ட்ராஸ் காரின் போட்டி மாடலான இதன் சில வேரியண்ட்களில் கார்னரிங் ஹெட்லைட்கள் உள்ளன. சில வேரியண்ட்களில் ஹெட்லைட்கள் ஹாலோஜன் பல்புகளைப் கொண்டிருக்கின்றன என்றாலும், கார்னரிங் ஹெட்லைட்களும் இந்த காரின் பல வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter), கார்னரிங் ஹெட்லைட்களுடன் கிடைக்கும் மிகவும் மலிவான காம்பாக்ட் எஸ்யூவி கார் இது ஆகும். குறைந்த விலையில் கிடைப்பதற்கு ஏற்ப இந்த காரின் அளவு சிறியதாக உள்ளது. இருப்பினும், எக்ஸ்டர் சிறந்த மதிப்பை வழங்குகிறது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite), இதன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் ஃபாக் விளக்குகளுடன் ஒருங்கிணைந்த கார்னரிங் ஹெட்லைட் வழங்கப்படுகிறது. ஜப்பானிய-ஸ்டைல் எஸ்யூவி காரான இது ஆசிய NCAP கிராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க இந்திய மார்க்கெட்டை டார்கெட் செய்து கொண்டுவரப்பட்ட மேக்னைட் 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா நெக்ஸான் (Tata Nexon), சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் பிரிவில் ஒரு முன்னோடியான இது, குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் உயர் வேரியண்ட்களில் புரொஜெக்டர் எல்இடிகளுடன் கூடிய கார்னரிங் ஹெட்லைட்கள் உள்ளன. இது இரவு நேர பார்வைத்திறனை திறம்பட மேம்படுத்துகிறது.

ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq), ஸ்கோடாவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார். ஸ்கோடா குஷாக் என்ற ஓரளவு வரவேற்பு பெற்ற காரின் அதே தளத்தில் கட்டமைக்கப்பட்ட புதிய காம்பாக்ட் எஸ்யூவி கார் இது ஆகும். இது கார்னரிங் ஹெட்லைட்களுடன் வருகிறது. கைலாக் 'சிக்னேச்சர்' வேரியண்ட் 10 லட்சம் ரூபாய் விலை வரம்பில் உள்ளது. வலுவான உடல் தரத்துடன் கார் விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்னரிங் விளக்குகள் உடன் கார் ஓட்டுவது பாதுகாப்பானது மற்றும் பார்க்கவும் சூப்பராக இருக்கும். இத்தகைய விளக்குகள் உங்களுக்கு கார் டிரைவிங்கின் போது வளைவுகளில் திரும்புகையில் கூடுதல் தைரியத்தை கொடுக்கும். இத்தகைய வசதி உடன் கார்கள் 10 லட்ச ரூபாய்க்குள் கிடைப்பது அருமையான விஷயமாகும்.


Click it and Unblock the Notifications









