டிரைவருக்கு காரில் இந்த வசதி இருந்தாலே பாதி பிரச்சனை இல்ல! 10 லட்ச ரூபாய்க்குள் இத்தனை கார்களா!!
இந்தியச் சந்தையில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை சரிசெய்யக்கூடிய வசதியுடன் பல ஹேட்ச்பேக் (Hatchback), சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) மற்றும் செடான் (Sedan) கார்கள் கிடைக்கின்றன. இந்த பட்டியலில் ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டாடா பன்ச் போன்ற கார்கள் உள்ளன. பொதுவாக, இந்த வசதி உயர்தர கார்களில் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): சப்-காம்பாக்ட் எஸ்யூவிகள் மற்றும் கிராஸ் ஓவர்கள் பிரிவில் இந்த ஹூண்டாய் மைக்ரோ-எஸ்யூவி அதன் டாப் வேரியண்ட்களில் உயரத்தை சரிசெய்யக் கூடிய ஓட்டுநர் இருக்கை வசதியை வழங்குகிறது. இதன் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வருகின்றன.

இதன் எஸ்.எக்ஸ் (SX) மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது. 1.2 லிட்டர் என்ஜின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (AMT Gearbox) உடன் கிடைக்கும் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் டூயல் டோன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) சுமார் 8.44 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

டாடா பன்ச் (Tata Punch): ஒரு உறுதியான கட்டமைப்பு மற்றும் வசதியான பயண அனுபவத்திற்குப் பெயர் பெற்ற மைக்ரோ-எஸ்யூவி ஆகும். இதில் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை வசதி உயர்தர அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் (Accomplished Plus) மற்றும் அதற்கு மேலான வேரியண்ட்களில் இருந்து கிடைக்கிறது. பன்ச் காரின் அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் 7.52 லட்சம் ரூபாய் ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): முன்னர் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (XUV300) என அழைக்கப்பட்டுவந்த இந்த காரில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் பல வேரியண்ட்களில் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை வசதி வழங்கப்படுகிறது. எம்.எக்ஸ்3 புரோ (MX3 Pro) மற்றும் ஏ.எக்ஸ்5 (AX5) என்கிற இந்த காரின் டாப் வேரியண்ட்களில் இந்த அம்சம் கிடைக்கிறது. இந்த வசதியுடன் கூடிய எம்.எக்ஸ்3 புரோ 1.2 பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 9.11 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

கியா சொனெட் (Kia Sonet): இந்த கியா சப்-காம்பாக்ட் எஸ்யூவி அதன் விசாலமான கேபினுக்குப் பெயர் பெற்றது. இதன் எச்டிகே (ஆப்ஷ்னல்) (HTK(O)) வேரியண்ட்டில் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை வசதி உள்ளது. சொனெட் எச்டிகே (ஆப்ஷ்னல்) வேரியண்ட் ரூ.8.74 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைக்கு கிடைக்கிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): ஹேட்ச்பேக் பிரிவில் நீண்ட கால பிரபலமான காரான இதன் உயர்தர வேரியண்ட்களில் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை வசதி வழங்கப்படுகிறது. மேலும், 6 ஏர்பேக்குகள் போன்ற தரமான பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்படுகின்றன. ஸ்விஃப்ட் காரின் இசட்.எக்ஸ்.ஐ (ZXi) மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்களில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட்களின் ஆரம்ப விலை 7.53 லட்சம் ரூபாய் ஆகும்.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): இது ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். இதன் ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) வேரியண்ட்களில் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் 6 ஏர்பேக்குகள் உட்பட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. பலேனோ ஜெட்டா வெறும் 7.70 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): இந்த வரிசையில் நாம் பார்க்கும் மற்றொரு பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இது ஆகும். இதன் டாப் வேரியண்ட்களில் பல்வேறு அம்சங்களுடன் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை வசதியும் கிடைக்கிறது. ஐ20 காரின் ஸ்போர்ட்ஸ் (Sportz) மற்றும் அஸ்டா (Asta) வேரியண்ட்களில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. ஐ20 ஸ்போர்ட்ஸ் 7.74 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சவுகரியமான பயணத்திற்கு உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மிகவும் அவசியமாகிறது. ஏனெனில், காரின் மொத்த கண்ட்ரோலும் டிரைவரிடம் தான் உள்ளது. இத்தகைய வசதி உடன் 10 லட்ச ரூபாயில் கார் வாங்கலாம் என்பது சிறப்பான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









