குழந்தையை மடியில் வைத்து அழைத்து செல்லலாம்னு நினைக்காதீங்க! 10 லட்ச ரூபா உள்ளேயே கார்கள் கிடைக்குது!
கார்களில் கைக்குழந்தைகளை மற்றும் சிறுவர்/ சிறுமிகளை அழைத்து செல்வது என்பது எப்போதுமே சவாலான காரியம் ஆகும். ஏனெனில், அவர்களின் உயரம் குறைவு என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு பெரியர்களில் இருந்து சற்று வேறுப்படும். உதாரணத்திற்கு, முன் இருக்கைகளில் வழங்கப்படும் ஏர்பேக்குகள் (Airbags) விபத்தின்போது விரிவடையும் சமயத்தில் குழந்தைகள் முன் இருக்கையில் இருந்தால், அதுவே அவர்களுக்கே அதிக காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
இதனாலேயே, கார்களில் முன் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்க கூடாது என இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் இருக்கையில் அவர்களை அமர வைக்கும் போதும் கூட ISOFIX ஆங்கர்களை (கார் இருக்கைகளை குழந்தைகளுக்கான இருக்கைகளுடன் இணைக்கும் கருவி) பயன்படுத்தி, அவர்களுக்கான பிரத்யேக இருக்கையில் அமர வைக்க வேண்டும். இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களிலும் ISOFIX ஆங்கர்கள் வழங்கப்படுகின்றன.

டாடா பன்ச் (Tata Punch): குளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பு சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர மதிப்பீட்டையும் பன்ச் பெற்றுள்ளது. இந்த காரில் ISOFIX ஆங்கர்கள், இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், சிஎன்ஜி (CNG) வேரியண்ட்களும் கிடைக்கின்றன. பன்ச் காரின் ஆரம்ப விலை ரூ.6.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் மற்றும் ISOFIX குழந்தைகளுக்கான இருக்கை ஆங்கர்களுடன் வரும் எக்ஸ்டர் ஆனது டாடா பன்ச் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அறிமுகம் செய்த கார் ஆகும். இதில் எலக்ட்ரிக் சன்ரூஃப், பின் இருக்கைகளுக்கும் ஏசி வென்ட்கள் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் போன்ற அம்சங்கள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் டாப் வேரியண்ட்களில் கிடைக்கின்றன. எக்ஸ்டரின் ஆரம்ப விலை ₹6.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (Electronic Stability Control) மற்றும் ISOFIX மவுண்ட்களுடன் வரும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் சில வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் விலைக்குள் கிடைக்கின்றன. இந்த மஹிந்திரா எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): பெரியவர்களுக்கான பாதுகாப்பில் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற மற்றொரு டாடா கார் இதுவாகும். ஆனால், பன்ச் எஸ்யூவி கார் போன்று இல்லாமல், ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான அல்ட்ராஸின் அனைத்து வேரியண்ட்களிலும் ISOFIX ஆங்கர்கள் பொருத்தப்படுகின்றன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் ரக காரான ஸ்விஃப்ட் கடந்த 2024ஆம் ஆண்டில்தான் முக்கியமான அப்கிரேட்களை பெற்றது. அந்த வகையில், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ISOFIX மவுண்ட்களுடன் ஸ்விஃப்ட் கார்கள் உருவாக்கப்படுகின்றன. ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் டிசையர் காரை அப்டேட் (Update) செய்து அறிமுகம் செய்தது. ஏனெனில், ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் (Sedan) ரக வெர்சன் தான் டிசையர் ஆகும். இதனால், ஸ்விஃப்ட் காரை போன்று ISOFIX மவுண்ட்கள் டிசையர் காரிலும் இடம்பெறுகின்றன. அத்துடன், இந்த கார் ஆறு ஏர்பேக்குகளை நிலையான அம்சமாக பெறுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 6 கார்களுள் ஒரு காரை தேர்வு செய்வது கடினம் தான். ஏனெனில், இவை அனைத்துமே மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கிலான மக்களால் வாங்கப்படும் பிரபலமான கார்களாக விளங்குகின்றன. தற்போதைக்கு குடும்பத்தில் எந்த குழந்தைகளும் இல்லையென்றாலும், எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்பதினால் ISOFIX ஆங்கர்கள் உடன் கிடைக்கும் கார்களை வாங்குவது நல்லது. இதில் சிறப்புமிக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவில் பல விலை குறைவான கார்களில் கூட இந்த வசதி ஆனது அடிப்படை வசதியாக வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









