கார் ஸ்டீயரிங் சக்கரத்தில் சின்ன சைஸில் இருக்கும்! கடுகு சிறுத்தாலும்... பாதுகாப்புக்கு ரொம்ப முக்கியமானது!!
கார்களை ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட கார்களில் கியர்களை மேனுவலாக மாற்ற, ஸ்டீயரிங் சக்கரத்துடன் இணைக்கப்பட்ட சிறிய அளவிலான கியர்கள் "பேடில் ஷிஃப்டர்கள்" (Paddle Shifters) என அழைக்கப்படுகின்றன. இவை ஓட்டுநர்களுக்கு காரில் கூடுதல் கட்டுப்பாட்டை அளித்து, வேகமான மற்றும் உற்சாகமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகின்றன.
வழக்கமாக, ஸ்டீயரிங் சக்கரத்தின் வலது பக்கப் பாட்டில் ஷிஃப்டர் கியர்களை அதிகரிக்க ("+"), இடது பக்கப் பாட்டில் ஷிஃப்டர் கியர்களைக் குறைக்க ("-") பயன்படுத்தப்படுகிறது. முந்திச் செல்லும்போதும், மலைப்பாதைகளில் ஏறும்போதும் இயந்திரத்தின் சுழற்சித் திறனைப் பராமரிப்பதற்கும், மேடான பகுதியில் இருந்து இறங்கும்போதும் என்ஜின் பிரேக்கிங் மூலம் பாதுகாப்பாகச் செல்வதற்கும் இவை மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன.

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், பேடில் ஷிஃப்டர்கள் கொண்ட கார்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டாடா நெக்ஸான் அதன் ஏஎம்டி (AMT) வேரியண்ட்களிலும் பேடில் ஷிஃப்டர்களை வழங்குகிறது. இவை அவற்றின் குறிப்பிட்ட வேரியண்ட்களை பொறுத்து பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கின்றன.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்தியாவில் பேடில் ஷிஃப்டர்களை வழங்கும் மலிவான எஸ்யூவி (SUV) ரக கார் இது ஆகும். மைக்ரோ-எஸ்யூவி வகையைச் சேர்ந்த காரான இதில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 81.8 bhp இயக்க ஆற்றலையும், 113.8 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

இதன் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பேடில் ஷிஃப்டர் வசதி வழங்கப்படுகிறது. SX, SX(O) மற்றும் SX(O) Connect ஆகிய ஏஎம்டி வேரியண்ட்கள் பேடில் ஷிஃப்டர்களுடன் வருகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showrooms) தற்சமயம் ரூ.8.12 லட்சத்தில் இருந்து ரூ.9.61 லட்சம் வரையில் உள்ளன.
ஹோண்டா அமேஸ் (Honda Amaze): பேடில் ஷிஃப்டர்களுடன் வரும் பிரபலமான இது காம்பாக்ட் செடான் (Compact Sedan) வகையைச் சேர்ந்தது. இதில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் 90 எச்பி இயக்க ஆற்றலையும், 110 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் 7-ஸ்பீடு CVT கியர்பாக்ஸ் உடன் பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

அமேஸ் காரின் VX CVT மற்றும் VX CVT எலைட் வேரியண்ட்கள் இந்த அம்சத்தைக் கொண்டுள்ளன. இந்த வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.15 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. பேடில் ஷிஃப்டர்கள் மட்டுமின்றி, இன்னும் பல அட்வான்ஸ்டு வசதிகளையும் ரூ.10 லட்சத்திற்குள் கொண்ட காராக அமேஸ் விளங்குகிறது.
டாடா நெக்ஸான் (Tata Nexon): இது ஒரு பிரபலமான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும். இதன் சில ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் பேடில் ஷிஃப்டர்கள் கிடைக்கின்றன. நெக்ஸான் காரின் AMT மற்றும் DCT கியர்பாக்ஸ் வேரியண்ட்களில் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் பிளஸ் AMT வேரியண்ட் பத்து லட்ச ரூபாய்க்குள் நல்ல தேர்வாகும்.

இது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் உடன் வருகிறது. இதில், டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேடில் ஷிஃப்டர்கள் வாகனத்திற்கு சிறப்பான செயல்பாட்டுத் திறனை வழங்குவதுடன், ஸ்போர்டியான டிரைவிங் (Driving) உணர்வையும் அளிக்கின்றன. இன்றைய கால நவீன டிஜிட்டல் உலகில் இத்தகைய வசதிகள் கார் ஓட்டுநர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகின்றன. இத்தகைய சிறப்புமிக்க பேடில் ஷிஃப்டர்களை ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களில் கூட வாங்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









