10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கினால் முக்கியமா இது இருக்கானு பாருங்க! ஹைவே பயணத்துக்கு ரொம்ப அவசியம்!
பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் கார்களுள் சில கார்களில் பின் இருக்கை வரிசையில் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் (Arm Rest) வசதி வழங்கப்படுகிறது. இது, குறிப்பாக கார்களின் உயர்தர வேரியண்ட்களில், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் காம்பாக்ட் செடான், எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்கள் அடங்குகின்றன.
மாருதி சுஸுகி டிசையர், ஹோண்டா அமேஸ், டாடா நெக்ஸான் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகியவை இவற்றில் சில முக்கிய தேர்வுகள் ஆகும். பின் இருக்கை வரிசையில் ஆர்ம்ரெஸ்ட் வசதியுடன் பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு செடான் ரக கார் இது ஆகும். குறிப்பாக, குடும்பங்களுக்கான நம்பகமான மற்றும் எரிபொருள் சிக்கனமான செடான் காரான டிசையரில், ZXi மற்றும் ZXi பிளஸ் வேரியண்ட்களில் பின் இருக்கை ஆர்ம்ரெஸ்ட் மற்றும் விசாலமான லெக்ரூம் வழங்கப்படுகிறது.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்த காம்பாக்ட் செடான் கார் அதன் வசதியான மற்றும் விசாலமான பின் இருக்கைகளுக்காகப் பெயர் பெற்றது. விஎக்ஸ் (VX) மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்களில் பின் வரிசை இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கிறது. இது நீண்ட தூர பயணங்களின் போது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): அதிக தொழிற்நுடப் அம்சங்கள் நிறைந்த இந்த கார் ஆனது டிசையருக்கு அடுத்து ஓரளவிற்கு அதிகம் விற்பனையாகும் செடான் ரக கார் ஆகும். இந்த காரின் எஸ், எஸ்.எக்ஸ் (SX) மற்றும் SX(O) வேரியண்ட்களில் பின் இருக்கை ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது. மேலும், பின் இருக்கை ஏசி வென்ட்கள் போன்ற கூடுதல் வசதிகளுடன் இந்த ஹூண்டாய் கார் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்குகிறது.

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா நெக்ஸானின் (உயர்தர வேரியண்ட்கள்) பாதுகாப்பு அம்சங்களுக்கு குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு திடமான கட்டமைப்புடன் உருவாக்கப்படும் இந்த கார், வசதியான பயணத்திற்கு பின் இருக்கை வரிசையில் ஆர்ம்ரெஸ்ட்டை வழங்குகிறது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): இவ்வளவு நேரம் செடான் ரக கார்களை பார்த்த நிலையில், இனி சில எஸ்யூவி (SUV) ரக கார்களை பார்க்கலாம். ஹூண்டாய் வென்யூவின் டாப் வேரியண்ட்களில் பின் இருக்கை ஆர்ம்ரெஸ்ட், நன்கு வடிவமைக்கப்பட்ட கேபின் மற்றும் பல தரப்பட்ட என்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவை கிடைக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காருக்கு மாற்றாக மஹிந்திராவில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காம்பாக்ட் எஸ்யூவி கார், அதன் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்காக வாடிக்கையாளர்களால் பாராட்டப்படுகிறது. இதன் உயர்தர வேரியண்ட்களில் பின் இருக்கை ஆர்ம்ரெஸ்ட் வசதி இடம்பெறுகிறது.

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): பல்துறை அம்சங்கள் கொண்ட இந்த 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி கார், அதன் உயர்தர வேரியண்ட்களில் இரண்டாம் வரிசை இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட்டை வழங்குகிறது. எம்பிவி ரக கார் என்பதால், விசாலமான இடவசதி உடன் சவுகரியமான பயணத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பெரிய குடும்பங்களுக்கு இது ஏற்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு காரிலும் முக்கியமாக இருக்க வேண்டிய அம்சங்களுள் ஒன்று, பின் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம் ரெஸ்ட் ஆகும். குறிப்பாக, தொலைத்தூர பயணங்களின் போது இதன் தேவை அதிகமாக இருக்கும். இருப்பினும், இத்தகைய சவுகரிய அம்சத்துடன் கிடைக்கும் கார்களை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம் என்பது அருமையான விஷயமாகும்.


Click it and Unblock the Notifications









