காரை பார்த்தீங்களே, விலையை பார்த்தீர்களா? எல்லாமே ரூ.10 லட்சத்திற்குள்... சன்ரூஃப் தான் மெயின் ஹைலைட்டே!
இன்றைய கால மாடர்ன் கார்களில் அத்தியாவசியமானதாக மாறிவரும் வசதிகளுள் ஒன்று சன்ரூஃப் (Sunroof) ஆகும். ஜாலியாக வானத்தை பார்த்தப்படி, காரில் பயணிக்க யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். அதுவும் இன்றைய கால குழந்தைகளுக்கு சன்ரூஃப் வழியாக வெளிகாற்றை சுவாசித்துக் கொண்டு, வானத்தை பார்த்தப்படி காரில் பயணிக்க மிகவும் பிடித்துள்ளதினாலேயே பெற்றோர்களும் சன்ரூஃப் உடன் கார் வாங்க விரும்புகின்றனர்.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் இந்த தேவையை புரிந்துக் கொண்டு கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் குறைந்த விலையிலான கார்களிலும் சன்ரூஃப்-ஐ வழங்க முயற்சிக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அளவில் சிறியதான காராக எக்ஸ்டர் விளங்குகிறது. அளவில் சிறியதாக இருப்பினும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ஹூண்டாய் காராக இருப்பதால் ஏகப்பட்ட அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்கள் எக்ஸ்டர் காரில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ரூ.7.68 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) இருந்து கிடைக்கும் எக்ஸ்டர் காரில் சன்ரூஃப் வசதியும் வழங்கப்படுகிறது.

டாடா பஞ்ச் (Tata Punch): விற்பனையில் எக்ஸ்டர் காருக்கு போட்டியாக உள்ள பஞ்ச் காரிலும் சன்ரூஃப் ஆனது அட்வென்ச்சர் எஸ் வேரியண்ட்டில் இருந்து வங்கப்படுகிறது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.7.71 லட்சமாக உள்ளது. இந்தியாவில் தற்சமயம் மக்கள் அதிகம் பேர் வாங்கும் கார்களுள் ஒன்றாக பஞ்ச் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் எஸ்யூவி கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளை மஹிந்திரா வழங்குகிறது. அந்த வகையில் சன்ரூஃப் வசதியும் இந்த காரில் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக இருப்பினும், ரூ.6.20 லட்சத்தில் இருந்தே ஐ20 விலையை கொண்டுள்ளது. ஸ்போர்டியான தோற்றத்தை கொண்ட இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரிலும் சன்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. விற்பனையில் பலேனோ காரின் ஆதிக்கத்தை சமாளித்துவரும் ஐ20 கார் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான யூனிட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு தரமான கார், வென்யூ ஆகும். கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி (SUV) ரக கார். சன்ரூஃப் உடன் ரூ.7.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. தோற்றத்தில் மட்டுமின்றி, ஹூண்டாய் நிறுவனத்தின் உலக தரத்திலான தொழிற்நுட்பங்கள் உடன் வென்யூ இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.

கியா சொனெட் (Kia Sonet): வென்யூவை போன்று கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி கார் தான், சொனெட் ஆகும். இன்னும் சொல்லப்போனால், நிறைய பாகங்களை இந்த இரு கார்களும் பகிர்ந்துக் கொண்டு உருவாக்கப் படுகின்றன. இதனாலேயே, கிட்டத்தட்ட ஒரே அளவிலான விலையில் சன்ரூஃப் உடன் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சன்ரூஃப் உடன் கார் வாங்கும் கனவை இந்த கார்களில் ஒன்றை வாங்கி நிஜமாக்கிக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ள கார்களில் சாதாரணமான சிங்கிள்-பேன் (Single-pane) சன்ரூஃப் தான் வழங்கப்படுகிறது. ஏனெனில், அவைதான் ரூ.10 லட்சத்திற்குள் விலைக் கொண்ட கார்களில் வழங்கப்படுகின்றன. பனோராமிக் (Panoramic) சன்ரூஃப் வழங்கப்படும் கார்களின் விலைகள் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications









