ஓட்டும்போதே கண்டுப்பிடிச்சிடலாம் காரில் சாதாரணமான என்ஜின் இல்லைனு! ரூ.10 லட்சத்தில் கிடைப்பதுதான் ஆச்சிரியம்!
இன்றைய கால மாடர்ன் கார்களில் என்ஜின்கள் (Engines) பல்வேறு விதங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. அதன் விளைவாக, டர்போ (Turbo) என்ஜின்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வழக்கமான என்ஜின்களை காட்டிலும் ஆற்றல்மிக்கவை ஆக டர்போ என்ஜின்கள் உருவாக்கப்படுகின்றன. உலகளவில் டர்போ என்ஜின்களின் பயன்பாடு நீண்ட வருடங்களாக இருப்பினும், இந்தியாவில் கார்களில் டர்போ என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவது சமீப காலமாக தான் அதிகரித்து வருகிறது.
இந்த நிலை மெல்ல மெல்ல அதிகரித்து, தற்போது டர்போ என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படும் கார்கள் கூட உள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq) காரை சொல்லலாம். அந்த வகையில், ரூ.10 லட்சத்திற்குள் டர்போ என்ஜின் உடன் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஸ்கோடா கைலாக்: சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் கார் என்பதாலேயே கைலாக்கை முதலாவதாக பார்க்கிறோம். 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் என்கிற ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனில் ஸ்கோடா கைலாக் விற்பனை செய்யப்படுகிறது. கைலாக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) தற்சமயம் ரூ.8.25 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): கைலாக் காரை போலவே டர்போ என்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனை செய்யப்படும் மற்றொரு கார் நெக்ஸான் ஆகும். ஆனால், கைலாக் காரை போல் இல்லாமல், டீசல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் நெக்ஸான் கிடைக்கிறது. இந்த டாடா காரில் வழங்கப்படுவது எதுவும் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் கிடையாது; எல்லாமே டர்போ என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும்.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): இந்திய சந்தையில் கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், ஃபிரான்க்ஸ் ஆகும். பலேனோ (Baleno) காரின் அடிப்படையில் மிகவும் ஸ்டைலிஷானதாக உருவாக்கப்படும் ஃபிரான்க்ஸ் காரில் 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ என்ஜின் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திராவின் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காராக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த காரில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): இந்தியாவில் பிரபலமான சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) கார்களுள் ஒன்று, வென்யூ ஆகும். இந்த காரில் பொருத்தப்படும் 1 லிட்டர் டர்போ ஜிடிஐ என்ஜினும் மக்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. இது இல்லாமல், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் வென்யூ கிடைக்கிறது.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): வென்யூவை போன்று சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக இருப்பினும், கைகர் காரின் விற்பனை பெரிய அளவிற்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதேபோல், இந்த காரில் வழங்கப்படும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் அதிகப்படியான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின் மூலம் மார்க்கெட்டில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜினை கொண்ட கார்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருவதை அறிய முடிகிறது. ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களிலும் டர்போ என்ஜின்களின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பது, எதிர்காலத்தில் இத்தகைய டர்போ என்ஜின்களின் பயன்பாடு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. அதேநேரம், எலக்ட்ரிக் கார்களின் வளர்ச்சியினால் டர்போ என்ஜின்களின் காலம் அதிக நாட்களுக்கு இருக்காது என்கிற கருத்தும் உள்ளது.


Click it and Unblock the Notifications









