காரின் டயர்களை தட்டி பார்த்துட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல! இந்த 10 லட்ச ரூபா கார்களில் கூட கிடைக்குது!
பத்து லட்சம் ரூபாய்க்குள் கார்களை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) வசதியுடன் கண்டறிவது சில நேரங்களில் சவாலாக இருக்கலாம். ஏனெனில் இந்த அம்சம் பெரும்பாலும் உயர் ரக கார்களில் தான் அதிகம் காணப்படுகிறது. அவை பத்து லட்சம் ரூபாய் விலையைத் தாண்டிவிடும். இருப்பினும், சில கார் மாடல்கள் தங்கள் குறிப்பிட்ட வேரியண்ட்களில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள் TPMS வசதியை வழங்குகின்றன.

ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ-எஸ்யூவி கார் ஆனது அதிநவீன TPMS உடன் வருகிறது. இது டயரில் உள்ள காற்றின் அழுத்தத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும். இதன் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது. இது பத்து லட்சத்துக்கும் குறைவான விலையில் இந்த வசதியுடன் கிடைக்கும் எளிதில் அணுகக்கூடிய கார்களில் ஒன்றாக உள்ளது. இதன் அடிப்படை வேரியண்ட்டான இஎக்ஸ் கூட ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது.

நிசான் மேக்னைட் காம்பாக்ட் எஸ்யூவி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட பிறகு, TPMS-ஐ அனைத்து வேரியண்ட்களிலும், சிஎன்ஜி மாடல்களிலும் கூட ஒரு நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. அதேபோல், மேக்னைட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக பொருத்தப்படுகின்றன.

ரெனால்ட் டிரைபர் என்கிற விலை குறைவான எம்பிவி ரக காரிலும் TPMS வசதி அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. அதிக இடவசதியுடன் கூடிய வாகனத்தை விரும்புவோருக்கு, TPMS பாதுகாப்புடன், டிரைபர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அளவில் பெரியதான எம்பிவி காராக இருப்பினும், 10 லட்ச ரூபாய்க்குள் கிடைப்பதுதான் இதன் சிறப்பம்சம் ஆகும்.

டாடா பன்ச் மைக்ரோ-எஸ்யூவி ஆனது அதன் உயர் ரக 'அக்கம்பிளிஷ்ட்' மற்றும் 'க்ரியேட்டிவ்' வேரியண்ட்களில் TPMS வசதியை வழங்குகிறது. இருப்பினும், இதன் ஆன்-ரோடு விலையைப் சரிப்பார்ப்பது அவசியம். ஏனெனில் இந்த டாடா காரின் சில டாப்-எண்ட் வேரியண்ட்களின் விலைகள் பத்து லட்சம் ரூபாயைத் தாண்ட வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் அதன் நடுத்தர 'ஸ்போர்ட்ஸ்' வேரியண்ட் மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்களில் நிகழ்நேர அளவீடுகளை காட்டும் TPMS வசதியை வழங்குகிறது. இந்த வேரியண்ட் பத்து லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் வருகிறது. மேற்கூறப்பட்ட மற்ற கார்களை போன்று இதிலிலும் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டாப்-எண்ட் 'எக்ஸ்.இசட்+' வேரியண்டில் TPMS வசதி வழங்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை உடனான எண்ட்ரி-லெவல் வேரியண்ட் பத்து லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கிறது. இதன் மூலம், போதுமான அம்சங்களுக்கும், மலிவான விலைக்கும் இடையே இந்த கார் நல்ல சமநிலையை வழங்குகிறது.

ரெனால்ட் கைகர் காம்பாக்ட் எஸ்யூவி கார் அதன் உயர் ரக வேரியண்ட்களில் TPMS வசதியை வழங்குகிறது. டாடா பன்ச் போலவே, இது பத்து லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் வருகிறதா என்பதை உறுதிப்படுத்த குறிப்பிட்ட வேரியண்ட்களின் விலைகளை அருகில் உள்ள ஷோரூமில் சரிபார்க்கவும். கைகர் காரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதுப்பிக்கப்பட்டு, ஆறு ஏர்பேக்குகள் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் ஆனது காரின் நான்கு சக்கர டயர்களிலும் எந்த அளவிற்கு காற்று உள்ளது என்பதை நிகழ் நேரத்தில் ஒவ்வொரு நொடியும் வழங்கக் கூடியது ஆகும். பாதுகாப்பான பயணத்திற்கு இந்த அளவீடுகளை அறிவது அவசியமானதாக உள்ளதால், இத்தகைய கருவி உடன் கிடைக்கும் கார்களை 10 லட்ச ரூபாய்க்குள் வாங்கலாம் என்பது உண்மையில் அசத்தலான அம்சம் ஆகும்.


Click it and Unblock the Notifications









