காரை திருடினு எங்கேயும் போக முடியாது... காஸ்ட்லீ கார்கள் இல்ல, 10 லட்ச ரூபாய் கார்களிலும் கிடைக்குது!
இந்தியாவில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில், கார் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட வாகன கண்காணிப்பு வசதியுடன் ஒரு காரை வாங்க விரும்பினால், பொதுவாக காரின் நடுத்தர அல்லது உயர்நிலை வேரியண்ட்டைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் இந்த தொழில்நுட்பம் எண்ட்ரி-லெவல் கார்களில் அரிதாகவே காணப்படுகிறது.
இந்த விலைப் பிரிவில், சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Compact-SUV) கார்கள் மிகவும் பிரபலமான தேர்வுகளாகும். இவை ஜிபிஎஸ் (GPS) அடிப்படையிலான வாகன கண்காணிப்பு மற்றும் பிற ரிமோட் அம்சங்களை உள்ளடக்கிய 'கனெக்டட் கார்' தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அவ்வாறு, ரூ.10 லட்சத்திற்குள் கார் நிறுவனத்தின் கண்காணிப்பு வசதியுடன் கிடைக்கும் சில சிறந்த கார்கள்...

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): அதிநவீன என்ஜின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். ஹூண்டாயின் "ப்ளூலிங்க்" (Bluelink) கனெக்டட் கார் தொழில்நுட்பம், இந்த காரின் உயர் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை டாப் வேரியண்ட்களாக இருப்பினும், ரூ.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் உள்ளன.
ப்ளூலிங்க் தொகுப்பு 60க்கும் மேற்பட்ட கனெக்டட் அம்சங்களை வழங்குகிறது. இதனுடன், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற ரிமோட் செயல்பாடுகளையும் கொண்டுள்ள வென்யூ காரில், ஜியோ-ஃபென்சிங் எச்சரிக்கைகள், வாகன கண்காணிப்பு. திருடப்பட்ட காரை ரிமோட் வாயிலாக நகர விடாமல் செய்யும் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம்.

டாடா நெக்ஸான் (Tata Nexon): பாதுகாப்பு, உறுதியான கட்டமைப்பு மற்றும் பலவிதமான கனெக்டட் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு இந்த டாடா கார் சிறந்தது. டாடா நெக்ஸானின் டாப் வேரியண்ட்களில் "iRA" கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்களாக இருப்பினும், சில "ஸ்மார்ட் பிளஸ்" வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கின்றன.
நெக்ஸான் 5-நட்சத்திர பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. கார் திருடப்பட்டால் அதனை கண்காணிக்கும் வசதி மற்றும் ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக ரிமோட் மூலமாக அதனை நகர விடாமல் செய்யும் வசதி போன்ற அம்சங்களை நெக்ஸான் வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி என பல்வேறு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

கியா சொனட் (Kia Sonet): சிறந்த வடிவமைப்பு, பிரீமியம் தரத்திலான கேபின் மற்றும் அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் சிறந்தது. சொனட் காரில் 'கியா கனெக்ட்' (Kia Connect) தொகுப்பின் ஒரு பகுதியாக கனெக்டட் வசதிகள், அதன் நடுத்தர முதல் உயர்நிலை வேரியண்ட்களில் கிடைக்கின்றன.
மேற்கூறப்பட்ட கார்களை போன்று, கார் திருடப்பட்டது குறித்த எச்சரிக்கையை உரிமையாளருக்கு தெரிவிப்பது & கண்காணிப்பது மற்றும் காரை அங்கிருந்து இயங்க விடாமல் செய்வது போன்ற வசதிகளை சொனட் காரிலும் பெறலாம். இந்த கியா காரின் HTE வேரியண்ட் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் இருந்தாலும், கனெக்ட் தொழில்நுட்பம் HTX மற்றும் அதற்கு மேற்பட்ட விலை அதிகமான வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்ட மூன்று கார்களும் வாகன கண்காணிப்பு வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில், இந்த அம்சம் ஆனது பிரிமீயம் தரத்திலான அம்சம் என்பது மட்டுமின்றி, மேற்கூறப்பட்ட விலைகள் யாவும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் கொஞ்சம் அதிகமாக வரும். அதேபோல், காரின் தொழிற்நுட்ப அம்சங்களின் பட்டியல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியண்ட்டைப் பொறுத்து மாறுபடும்.


Click it and Unblock the Notifications









