மஹிந்திரா ஷோரூமை அதிக பேர் தேடி வருவது இந்த மூன்று கார்களுக்கு தான்! 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்குதா?
மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து மஹிந்திரா கார்கள் விற்பனை ஒரேடியாக உச்சத்தை தொட்டுள்ளன. இதன் விளைவாக, கடந்த மாதங்களில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்து 2வது இடத்தை மஹிந்திரா பிடித்தது.
ஆனால், கடந்த 2025 நவம்பர் மாதத்தில் கார்கள் விற்பனையில் மஹிந்திராவை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முந்தியுள்ளது. இருப்பினும், மஹிந்திரா நிறுவனம் ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை கடந்த மாதத்திலும் நிலைநாட்டியுள்ளது. மஹிந்திராவின் மூன்று முக்கிய கார் மாடல்கள் இந்த சந்தையில் இடம்பெற்றுள்ளன. ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் (எக்ஸ்-ஷோரூம்) 2025 நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள் பற்றிய விவரங்கள் இங்கே...

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் 10,601 யூனிட்கள் விற்பனையாகி, ரூ.10 லட்சத்திற்கு உட்பட்ட விலையில் அதிகம் விற்பனையான மஹிந்திரா காராக திகழ்கிறது.
இதன் கடந்த நவம்பர் மாத விற்பனை ஆனது கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் 38% வளர்ச்சி கண்டுள்ளது. ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை விலை கொண்ட இந்த மஹிந்திரா காம்பாக்ட் எஸ்யூவி கார், சிறந்த பாதுகாப்பு மதிப்பீடுகளையும், விசாலமான உட்புறத்தையும் கொண்டுள்ளது.

மஹிந்திரா பொலிரோ (பொலிரோ நியோ உட்பட) (Mahindra Bolero): வலிமையான வடிவமைப்பிற்குப் பெயர் பெற்ற மஹிந்திரா பொலிரோ, 2025 நவம்பர் மாதத்தில் 10,521 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதன் விற்பனை 2024 ஆண்டு நவம்பரை விட மிக பிரம்மாண்டமான 49% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த காரின் விலைகள் தற்சமயம் ரூ.7.99 லட்சம் முதல் ரூ.10.49 லட்சம் வரை உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், பொலிரோ இல்லாமல், பொலிரோ நியோ காரும் விற்பனையில் உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா டியூவி300 காருக்கு மாற்றாக 2021ஆம் ஆண்டில் பொலிரோ நியோ அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா தார் (ரியர்-வீல்-டிரைவ் வேரியண்ட்கள்) (Mahindra Thar RWD): இந்தியாவின் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார் -ஐ குறைந்த விலையில் கொண்டுவரும் முயற்சியாக சில வருடங்களுக்கு முன்னர்தான் மஹிந்திரா தார் ரியர்-வீல்-டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தின் விலைகள் ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.
கடந்த 2025 நவம்பர் மாதத்தில் 10,234 தார் ரியர்-வீல்-டிரைவ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு, கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரை காட்டிலும் 18% வளர்ச்சி கண்டுள்ளன. ஒட்டுமொத்த மஹிந்திரா தார் வாகனங்களின் விலைகள் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் வரை உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையில் மஹிந்திரா நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சிக்கு இந்த மூன்று கார்களும் முக்கிய பங்களித்து வருகின்றன. இவற்றின் வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். நீங்கள் ஒன்றை கவனீத்தீர்கள் என்றால், இந்த மூன்று மஹிந்திரா கார்களுமே நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications









