ரூ.10 லட்சம் தான் உங்க பட்ஜெட்டா? இந்த 4 செடான் கார்களை விட்டால் வேற இல்ல!!
என்ன தான் உயரமான உடலமைப்பை கொண்ட எஸ்யூவி (SUV) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் வந்தாலும், தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார்களை ஓட்டுவது என்பது எப்போதுமே தனி ஃபீல் என்றுதான் சொல்ல வேண்டும். தரைக்கு அருகாமையில் அமர்ந்து கொண்டு கார் ஓட்டும்போது, ஏதோ ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுவதை போன்ற உணர்வு கிடைக்கும்.
இருப்பினும், அதிக கேபின் இடவசதி கிடைப்பதால் சமீப காலமாக எஸ்யூவி ரக கார்களையே மக்கள் அதிகம் வாங்க ஆரம்பித்துள்ளனர். செடான் கார்களில் கால்களை கொஞ்சம் அடக்கி ஒடுக்கி அமர்ந்துதான் பயணிக்க வேண்டும் என்கிற நிலைமை முந்தைய காலங்களில் இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் அதற்கேற்ப செடான் கார்களை உருவாக்க கார் கம்பெனிகள் துவங்கிவிட்டன.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் போதிய எண்ணிக்கையில் வராததால் குறைவான எண்ணிக்கையிலேயே செடான் ரக கார்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. ரூ.10 லட்சத்திற்குள் செடான் கார் என்று பார்த்தால், நான்கே நான்கு கார் மாடல்கள் தான் தற்சமயம் விற்பனையில் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் தற்போதைக்கு சிறப்பாக விற்பனையாகும் ஒரேயொரு செடான் கார், டிசைர் ஆகும். அந்த அளவிற்கு பிரபலமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift) கார் போன்றதான தோற்றத்தில் உருவாக்கப்படுவதினாலேயே டிசைர் கார்களையும் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் வாங்குகின்றனர்.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): ஹோண்டாவில் இருந்து தற்போதைக்கு இரண்டே இரண்டு கார்களுக்கு மட்டும்தான் தற்போதைக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது. அதில் ஒன்று, ஹோண்டா சிட்டி (City), மற்றொன்று ஹோண்டா அமேஸ் ஆகும். இரண்டுமே செடான் ரக கார்கள் தான் என்றாலும், சிட்டி ரூ.10 லட்சத்திற்கும் மேல் விலைமிக்கதாக உள்ளது. அதுவே, அமேஸ் ஆனது காம்பெக்ட்டான செடான் காராக விளங்குகிறது.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): மாருதி சுஸுகி டிசைர் காருக்கு அடுத்து அதிக பேர் வாங்கும் செடான் காராக அவ்ரா விளங்குகிறது. ஸ்டைலிஷான தோற்றம் மற்றும் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி ஏகப்பட்ட என்ஜின் ஆப்ஷன்கள் உடன் அவ்ரா கார் விற்பனை செய்யப்படுகிறது. அவ்ரா கார் அதன் குறைவான மைலேஜிற்காக பிரபலமானதாக உள்ளது.

டாடா டிகோர் (Tata Tigor): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான செடான் கார்களுள் ஒன்று. விலை குறைவானதாக இருப்பினும், டாடா பிராண்டில் இருந்து குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காராகவே டிகோர் உள்ளது. இருந்தாலும், வலிமையான உடல் தரத்திலும் சரி, சவுகரியமான பயணத்திலும் சரி டிகோர் சிறந்து விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செடான் ரக கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தாலும், இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ள செடான் கார்கள் பலரால் விரும்பி வாங்கப்பட கூடியதாக உள்ளன. ஆதலால், ரூ.10 லட்சத்திற்குள் செடான் காரை வாங்க விரும்புபவர்கள் இவற்றில் ஒன்றை வாங்க முயற்சிக்கலாம்.


Click it and Unblock the Notifications









