29 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்! விலையை கேட்டதும் ஷோரூமுக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்!
இந்தியாவில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் எது என்று தெரியுமா? மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) என்று இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை நினைக்கலாம். ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என்பதுதான் இந்த கேள்விக்கு சரியான பதில். ஆம், நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை ஃப்ரான்க்ஸ் தட்டி சென்றுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21,461 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. முன்னதாக நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை 15,192 ஆக மட்டுமே இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.52 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.88 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 1.2 லிட்டர் ட்யூயல் ஜெட் ட்யூயல் விவிடி பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் இன்ஜின் உடன் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த சிஎன்ஜி இன்ஜின்தான் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 9 இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நல்ல மைலேஜ், ஏராளமான வசதிகள் என வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் பூர்த்தி செய்கிறது. அத்துடன் இந்த காருக்கு விலை நிர்ணயமும் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் விற்பனையில் சாதனைகளை படைத்து கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), கியா சைரோஸ் (Kia Syros) மற்றும் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








