எல்லாரும் வாங்க நினைக்கும் எஸ்யூவி கார்கள் இதுதான்! மக்களின் சாய்ஸில் முதன்மையா இருக்கு!
இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில், 2025 ஆகஸ்ட் மாதத்திலும் காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் பிரிவு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி உள்ளது. டாடா நெக்ஸான் (Tata Nexon) 14 ஆயிரத்து 4 யூனிட்கள் விற்பனையாகி இந்தியாவிலேயே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காராக இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 14% ஆரோக்கியமான வளர்ச்சி என்பதைக் காட்டுகிறது. நெக்ஸான் காரின் பல்வேறு வகையான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களும், தொடர்ச்சியான அப்டேட்களும் இதன் விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. மாருதி சுசுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) 13 ஆயிரத்து 620 யூனிட்கள் விற்பனையாகி நெக்ஸானுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

இருப்பினும், ஆகஸ்ட் 2024-ஐ ஒப்பிடும்போது பிரெஸ்ஸாவின் விற்பனை 29% சரிவைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான காம்பெக்ட் எஸ்யூவி காராக பிரெஸ்ஸா முதலிடத்தை பிடித்து இருந்தது. இந்த சரிவு இருந்தாலும், மாருதியின் எஸ்யூவி வரிசையில் பிரெஸ்ஸா ஒரு வலுவான பங்களிப்பை வழங்கி வருகிறது.
இதற்கு அதன் எரிபொருள் சிக்கனமான பெட்ரோல் வேரியண்ட்களும், மாருதி நிறுவனத்தின் விரிவான விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கும் துணை புரிகின்றன. மாருதியின் மற்றொரு முக்கிய விற்பனை மாடலான ஃபிரான்க்ஸ் (Fronx), கடந்த மாதம் 12 ஆயிரத்து 422 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 12 ஆயிரத்து 387 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. கடுமையான போட்டி நிறைந்த சந்தையில் ஃபிரான்க்ஸ் காரின் நிலைத்தன்மையை இது உணர்த்துகிறது. மாருதி வரிசையில் ஸ்டைலான காராக ஃபிரான்க்ஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் வரவேற்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. டாடா பன்ச் (Tata Punch) 10,704 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகி உள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் 32% என்ற செங்குத்தான சரிவைக் குறிக்கிறது. ஒரு காலத்தில் வெற்றிகரமான விற்பனையை பதிவு செய்த பன்ச், தற்போது இந்தப் பிரிவில் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) 8,109 யூனிட்கள் விற்பனையாகி இந்த லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 11% குறைவு ஆகும். இந்தியாவில் ஹூண்டாய்க்கு வென்யூ ஒரு முக்கியமான தயாரிப்பாக இருந்தாலும், அதே விலை பிரிவில் மாற்று வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் வென்யூ காரின் விற்பனையில் வேகம் குறைந்துள்ளது.
ஆனால், வருகிற நவம்பர் மாத தொடக்கத்தில் வெளிவரும் புதிய தலைமுறை வென்யூ, மீண்டும் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா சொனெட் (Kia Sonet) 7,741 யூனிட்களுடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை விட 23% குறைவாகும்.

அதே நேரத்தில், மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 39% சரிவுடன் 5,521 யூனிட்களைப் பதிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) மறுசீரமைப்பு மற்றும் பண்டிகைக் காலத்தினால் ரூ.1.56 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டது, இந்த மஹிந்திரா காருக்கான தேவையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) 5,061 யூனிட்கள் விற்பனை உடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டின் 6,632 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 24% சரிவாகும். ஸ்கோடா சமீபத்தில் அறிமுகப்படுத்திய கைலாக் கடந்த மாதத்தில் 3,099 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா டைசர் (Toyota Taisor) 2,683 யூனிட்களுடன் இந்தப் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. இது இந்த காரின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையை விட 16% சரிவாகும்.
| Rank | Compact SUV | YoY Change | August 2025 Sales | August 2024 Sales |
|---|---|---|---|---|
| 1 | Tata Nexon | 14% | 14,004 | 12,289 |
| 2 | Maruti Brezza | -29% | 13,620 | 19,190 |
| 3 | Maruti Fronx | 0% | 12,422 | 12,387 |
| 4 | Tata Punch | -32% | 10,704 | 15,643 |
| 5 | Hyundai Venue | -11% | 8,109 | 9,085 |
| 6 | Kia Sonet | -23% | 7,741 | 10,073 |
| 7 | Mahindra XUV 3XO | -39% | 5,521 | 9,000 |
| 8 | Hyundai Exter | -24% | 5,061 | 6,632 |
| 9 | Skoda Kylaq | — | 3,099 | — |
| 10 | Toyota Taisor | -16% | 2,683 | 3,213 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆனது எஸ்யூவி கார்களிலேயே சற்று அளவில் சிறியது மற்றும் விலை குறைவானது ஆகும். இதனாலேயே காம்பெக்ட் எஸ்யூவி கார்களை பலரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









