டாடாவின் 27 வருட உழைப்பு... 10 லட்ச ரூபாய்க்குள் இத்தனை கார்களை விற்பனை செய்வது சாதாரணம் அல்ல!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என சொன்னால், அது மிகையில்லை. 1998இல் இருந்து கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கும் மேலாக கார்கள் உற்பத்தி & விற்பனையில் செயல்பட்டுவரும் டாடா நிறுவனம் இன்று இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வரிசையில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள டாடா நிறுவனம், கடந்த மாதத்தில் மொத்தம் 57 ஆயிரத்து 436 கார்களை இந்தியாவில் விற்பனை செய்து 2வது இடத்தை பிடித்துள்ளது. டாடா நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி (SUV) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) கார் மாடல்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஆறு டாடா கார்கள், நவம்பரில் சிறந்த விற்பனையை பதிவு செய்துள்ளன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): 22,434 யூனிட்கள் விற்பனையாகி, 2025 நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த சிறந்த விற்பனையான காராக இது திகழ்கிறது. நெக்ஸானின் டாப் வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்தை தாண்டிச் சென்றாலும், ஸ்மார்ட் மற்றும் பியூர் போன்ற பல வேரியண்ட்கள் தற்சமயம் ரூ.7.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.

டாடா பன்ச் (Tata Punch): கடந்த மாதத்தில் 18,753 யூனிட்கள் விற்பனை உடன், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நான்காவது சிறந்த விற்பனையான காராக இடம்பிடித்துள்ள இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.5.50 லட்சம் முதல் தொடங்குகின்றன. பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் இதன் உயர்தர வேரியண்ட்களின் விலைகளும் ரூ.10 லட்சத்திற்குள்ளாகவே உள்ளன.

டாடா டியாகோ (Tata Tiago): கடந்த நவம்பர் மாதத்தில் 5,988 யூனிட்கள் விற்பனையுடன் இந்த கார் நிலையான விற்பனையை தொடர்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான ஹேட்ச்பேக் காராக விளங்கும் டியாகோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகின்றன.

டாடா அல்ட்ராஸ் (Tata Nexon): டாடா நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான இது கடந்த மாதத்தில் 3,013 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. சிஎன்ஜி மற்றும் டீசல் உட்பட பல வேரியண்ட்களைக் கொண்ட இதன் விலை ரூ.6.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பமாகிறது.

டாடா கர்வ் (Tata Curvv): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் கிராஸ்ஓவர் காரான இது கடந்த நவம்பரில் 1,094 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதன் டாப் வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்தை விட விலை அதிகம் என்றாலும், பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்கள் ரூ.9.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கின்றன.

டாடா டிகோர் (Tata Tigor): கடந்த மாதத்தில் 488 யூனிட்கள் விற்பனையாகி, சந்தையில் மிகவும் மலிவு விலையிலான செடான் கார் விருப்பங்களில் ஒன்றாக ரூ.5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கிறது. ஆனால், இதற்கு விற்பனையில் போட்டியாக உள்ள மாருதி சுஸுகி டிசையர் (Dzire, ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) உள்ளிட்ட செடான் கார்கள் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் விற்பனையாகுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடிப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இருப்பினும், கடந்த பல மாதங்களாக தொடர் சரிவை கார்கள் விற்பனையில் சந்தித்துவந்த டாடா நிறுவனத்திற்கு, மீண்டும் 2வது இடத்தை பிடித்திருப்பது ஊக்கமளிக்கும் செய்தியாக இருக்கும். வாடிக்கையாளர்களின் சாய்ஸ் மஹிந்திராவை காட்டிலும் கடந்த மாதத்தில் டாடாவுக்கு அதிகம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









