10 லட்ச ரூபாயில் ரெண்டு கார் மட்டும்தான் விற்பனையில் இருக்கு... ஆனா ஒவ்வொரு மாதமும் விற்பனை 30,000ஐ தாண்டிடுது
2025 நவம்பர் மாதத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம், டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) ஆகிய ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட இரண்டு முக்கிய கார் மாடல்கள் மூலம் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இந்த இரு கார்கள் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன.
க்ளான்சா: ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில், கடந்த நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான டொயோட்டா கார்களில் க்ளான்சா முன்னிலை வகித்துள்ளது. மொத்தம் 5,032 க்ளான்சா கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்சமயம் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.6.39 லட்சம் முதல் ரூ.9.15 லட்சம் வரை உள்ளன.

2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 32% வளர்ச்சி ஆகும். ஏனெனில், அந்த மாதத்தில் 3,806 டொயோட்டா க்ளான்சா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், இந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் சுமார் 18% சரிவை இந்த கார் சந்தித்துள்ளது. ஏனென்றால், கடந்த அக்டோபர் மாதத்தில் 6,162 க்ளான்சா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்: டொயோட்டாவின் இந்த எம்பிவி (MPV) ரக கார் கடந்த மாதத்தில் 3,177 யூனிட்கள் விற்பனை உடன் க்ளான்சாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த 2024 நவம்பருடன் ஒப்பிடும்போது, இதன் விற்பனை 12% சரிந்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டில் இதே நவம்பர் மாதத்தில் 3,620 டைசர் கார்களை டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

டைசர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.21 லட்சம் முதல் ரூ.12.06 லட்சம் வரை உள்ளன. இதன் சில உயர் ரக வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தாலும், அடிப்படை மற்றும் நடுத்தர வேரியண்ட்கள் (1.2 பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில்) ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2025 நவம்பர் மாதத்தில் 30,085 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19% அதிகரிப்பாகும். ஆனால், கடந்த 2025 அக்டோபரில் இந்தியாவில் மட்டும் டொயோட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்திருந்தது.
தீபாவளி, ஜிஎஸ்டி திருத்தம் உள்ளிட்ட காரணங்களினால் அக்டோபர் மாதத்தில் டொயோட்டா கார்கள் உள்பட இந்தியாவில் ஒட்டுமொத்தமாகவே கார்களின் விற்பனை பெரியளவில் அதிகரித்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பர் மாதத்தில் டொயோட்டா கார்களின் விற்பனையும் சற்று குறைந்துள்ளது. இதனாலேயே, இந்த தொகுப்பில் நாம் பார்த்த க்ளான்ஸா மற்றும் டைசர் கார்களின் விற்பனை குறைந்துள்ளதே தவிர்த்து, இவை இரண்டுமே இந்தியாவில் ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகும் கார்கள் ஆகும். குறிப்பாக, கடந்த மாதத்தில் இந்திய அளவில் அதிகம் விற்பனையான கார்களில் க்ளான்சா 29வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த இரு டொயோட்டா கார்களுக்கு போட்டியாக சந்தையில் பல கார்கள் வெவ்வேறான பிராண்ட்களில் இருந்து கிடைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், டைசர் காருக்கு மாற்றாக, டொயோட்டா நிறுவனத்திலேயே ரூமியோன் (Rumion) எம்பிவி கார் ரூ.9.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. கடந்த 2025 நவம்பரில் 1,818 ரூமியோன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications