டீசல் கிடைக்கலனாலும் இதை வெச்சு ஓட்டலாம்... புது தொழில் துவங்குபவர்களுக்காக டாடா உருவாக்கும் சூப்பரான வாகனம்!!
பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி ஜனவரி 22 வரையில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்துக் கொண்டுள்ள நிலையில், டாடா மோட்டார்ஸும் அதன் புதிய வாகனங்களை காட்சிக்கு நிறுத்தி உள்ளது. அந்த வகையில், டாடா நிறுவனத்தில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள மினி டிரக் (Mini Truck) ஒன்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
டாடா மோட்டார்ஸில் இருந்து பல்வேறு கார் மற்றும் கனரக வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கும் வாகனம், ஏஸ் புரோ பை-ஃபியுல் (Ace Pro Bi-Fuel) ஆகும். அதாவது இந்த வாகனத்தை பெட்ரோல்/ டீசல் அல்லது சிஎன்ஜி-இல் இயக்க முடியும்.

சிஎன்ஜி என்பது அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆகும். கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் பல்வேறு சிறிய ரக கமர்ஷியல் வாகனங்களை காட்சிக்கு நிறுத்தி உள்ளது. அதில், ஏஸ் புரோ பை-ஃபியுல் வாகனமும் ஒன்றாகும்.
உடனடியாக அதிக டார்க் திறனை வழங்கும் வகையில் ஏஸ் புரோ பை-ஃபியுல் வாகனத்தை உருவாக்கி உள்ளனர். தோற்றத்தை பொறுத்தவரையில், மற்ற வழக்கமான டாடா ஏஸ் வாகனங்களில் இருந்து ஏஸ் புரோ பை-ஃபியுல் வாகனம் ஆனது முற்றிலும் புதுமையான தோற்றத்தை கொண்டிருக்கிறது. இதற்கேற்ப, மாடர்ன் தரத்திலான கலர் ஆப்ஷன்கள் இந்த வாகனத்திற்கு வழங்கப்பட உள்ளன.

ஏஸ் புரோ பை-ஃபியுல் வாகனத்தின் முன்பக்கத்தில் பியானோ கருப்பு நிறத்தில் பேனல் வழங்கப்பட்டிருக்க, அதன் மத்தியில் டாடா மோட்டார்ஸின் லோகோ வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனத்தின் கேபினும் முற்றிலும் புதுமையானதாக உள்ளது. இருப்பினும், டாடா ஏஸ் வாகனத்திற்கே உண்டான சில அம்சங்களையும் இந்த புதிய ஏஸ் வாகனத்தில் பார்க்க முடிகிறது. அதாவது, புதிய கௌல் டிசைன் உடன் வட்ட வடிவிலான ஹெட்லைட்கள் மற்றும் ஆரஞ்சு நிறத்திலான டர்ன் இண்டிகேட்டர்களை சொல்லலாம்.
டர்ன் இண்டிகேட்டர்கள் முன்பக்க பம்பர் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய ஏஸ் புரோ பை-ஃபியுல் வாகனத்திற்குள் டேஸ்போர்டில் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. இதில், அடாஸ் மூலமாக வாகனம் பாதையில் இருந்து விலகினாலோ, முன்பக்க மோதலுக்கு உள்ளாகினாலோ, பாதசாரிகள் மீது மோத நேர்ந்தாலோ, ரிவர்ஸில் வரும்போது குறுக்கே ஏதேனும் வாகனம் வந்தாலோ அதுகுறித்த எச்சரிக்கைகளை வழங்கும்.

அதிக மைலேஜுக்காக சிஎன்ஜி எரிபொருளை நிர்வகிக்கும் தொழிற்நுட்பம் மற்றும் கியர்களை மாற்றுவதற்கான அறிவுரையை இந்த வாகனத்தில் பெறலாம். அதேநேரம், வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் மொபைல் செயலி வாயிலாக தெரிந்துக் கொள்ளும் வசதியும் இந்த வாகனத்தில் உள்ளது. இதன் மூலமாக 31 கனெக்டட் வசதிகளை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா ஏஸ் வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால்தான், ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் பல்வேறு விதமான ஏஸ் வாகனங்களை டாடா நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ளது. ஏஸ் புரோ எலக்ட்ரிக் வாகனம் கூட காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நாட்டில் ஏஸ் வாகனத்தின் விற்பனை ஆனது மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









