டாடா ஏஸ் வாகனத்துக்கு வந்த வாழ்வ பாருங்க... இந்த காலத்துக்கு ஏற்ப மொத்தமா மாத்திட்டாங்க!
டாடா ஏஸ் (Tata Ace) வாகனத்திற்கு என்று இந்தியாவில் மிக பெரிய கஸ்டமர்ஸ் (Customers) கூட்டம் உள்ளதை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு சாலையில் திரும்பிய பக்கம் எல்லாம் டாடா ஏஸ் வாகனத்தை பார்க்க முடியும். இத்தகைய கமர்ஷியல் வாகனத்தை எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவர போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக கூறிவரும் நிலையில், அதற்கு முதல் படியாக டெல்லியில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ஏஸ் புரோ இவி (Ace Pro EV) வாகனம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டெல்லியில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுவந்த 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் சுமார் 32 நிறுவனங்கள் கலந்துக் கொண்டன. இதற்கேற்ப பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகமாக பதிவாகியது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சுமார் 8.5 லட்சம் பார்வையாளர்கள் இந்த கண்காட்சிகளை நேரில் கண்டுகளித்துள்ளனர். இதற்கெல்லாம் மத்திய அரசின் நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம் என சொல்ல வேண்டும். ஏனெனில், வழக்கமாக மத்திய அரசின் அனுமதி உடன் நடத்தப்படும் இந்த மோட்டார் கண்காட்சிகள், இந்த முறை நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்றன.
இதனால்தான், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் துவக்க நாளில் பங்கேற்றதை பார்த்திருப்பீர்கள். 2025 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய கார்களும், கமர்ஷியல் வாகனங்களும் காட்சிக்கு நிறுத்தப்பட்டன. அவற்றுள் குறிப்பாக, எதிர்பார்க்கப்பட்டதை போன்று டாடா ஏஸ் புரோ வாகனம் எலக்ட்ரிக் வெர்சனில் இந்த கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டது.

டாடா ஏஸ் வாகனத்தின் எலக்ட்ரிக் வெர்சன் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது, அதன் புரோ வெர்சன் ஆகும். இந்த வாகனத்தால் அதிகப்பட்சமாக 750 கிலோ வரையிலான எடையை சுமக்க முடியும். ஏஸ் புரோ இவி வாகனத்தில் 14.4kWh திறன் கொண்ட பேட்டரி பேக் (Battery Pack) வழங்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனம் என்பதால், அதற்கேற்ப 12 இன்ச்சில் இவி டயர்கள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த வாகனத்துடன் ஸ்பேர் டயரும் வழங்கப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் வாகனங்களில் இருந்து வேறுப்படும் வகையில், ஏஸ் புரோ இவி வாகனத்தில் ஏகப்பட்ட அம்சங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக வழங்கப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் கேமராவை சொல்லலாம்.

அதேபோல், வாகனத்தின் கேபினுக்குள் வழங்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது வாகனத்தை பற்றிய விபரங்களை வழங்குவது மட்டுமில்லாமல், பொழுதுப்போக்கு திரை ஆகவும் செயல்படும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, புதிய ஏஸ் புரோ இவி வாகனத்தில் அட்வான்ஸ்டு டிரைவர் உதவி அம்சங்கள் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கக்கூடியது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் & கேமரா மற்றும் ADAS உள்ளிட்டவை எல்லாம் டாடா ஏஸ் போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு முற்றிலும் புதியது ஆகும். இந்த ஏஸ் புரோ இவி எலக்ட்ரிக் வாகனம் மட்டுமின்றி, 2025 ஆட்டோ எக்ஸ்போவில் நிறைய கமர்ஷியல் வாகனங்களில் ADAS வசதிகளை பார்க்க முடிகிறது. இதில் இருந்து நமது இந்திய கனரக போக்குவரத்தானது விபத்தற்ற பாதுகாப்பான பயணத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









