மத்திய அரசு இதுக்காக தான் பாரத் கிராஷ் டெஸ்ட்டை கொண்டு வந்துச்சி! 10 லட்ச ரூபாயில் 5-ஸ்டார் ரேட்டிங் கார்களா!!
பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனைகளின் முடிவுகள் மக்களிடையே புதியதாக கார் வாங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அதாவது, சமீப காலமாக மக்கள் கார் வாங்கும்போது காரின் மைலேஜ் (Mileage), விலை உள்ளிட்டவற்றுடன், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் கார் எத்தனை நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது என்பதையும் கவனமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவில் செப்டம்பர் 2025 நிலவரப்படி, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் (எக்ஸ்-ஷோரூம்) பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற கார்களில் டாடா பன்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் மாருதி சுஸுகி டிசையர் ஆகியவை அடங்குகின்றன. முதல் முறையாக கார் வாங்குபவர்கள் அல்லது 10 லட்ச ரூபாய்க்குள் சிறந்த பாதுகாப்பான காரைத் தேடுபவர்களுக்கு இந்த கார்கள் சிறந்த தேர்வுகளாகும். இந்த கார்கள் குடும்பப் பயணங்களுக்கும், தினசரி உபயோகத்திற்கும் ஏற்றவை.

டாடா பன்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அளவில் சிறியதான மற்றும் விலை குறைவான எஸ்யூவி (SUV) ரக காராக இது விளங்குகிறது. டாடா பன்ச் காரின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) வெறும் ரூ.6.20 லட்சம் ஆகும்.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) ஆகிய இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீடுகளை இந்த டாடா கார் பெற்றுள்ளது. ஆறு ஏர்பேக்குகள், ABS உடன் EBD, மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இருப்பினும், இதன் டாப் வேரியண்ட்களின் விலை ரூ.10 லட்சத்தை தாண்டிவிடும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அடுத்த தலைமுறை வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் தொடக்க விலை ரூ.7.99 லட்சம் ஆகும்.

இந்த கார் AOP மற்றும் COP ஆகிய இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த காரின் அடிப்படை எம்.எக்ஸ்1 (MX1) வேரியண்டில் இரட்டை ஏர்பேக்குகள், ABS உடன் EBD மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. எம்.எக்ஸ்3 புரோ (MX3 Pro) மற்றும் எம்.எக்ஸ் டீசல் (MX2 Diesel) போன்ற இந்த காரின் சில வேரியண்ட்களும் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): மக்கள் அதிகம் பேர் வாங்கும் மாருதி கார்களுள் இதுவும் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் செடான் (Sedan) ரக கார் இதுவாகும். முற்றிலும் புதிய டிசையர் காரை கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது.
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை இந்த மாருதி கார் பெற்றுள்ளது. இந்த காரின் வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

டாடா பன்ச் இவி (Tata Punch EV): மேலே கண்ட பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்சன் தான் பன்ச் இவி ஆகும். பன்ச் காரை பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்திய சமயத்தில் பன்ச் இவி எலக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் சோதனையில் உட்படுத்தி இருந்தது.
இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு 5 நட்சத்திர பாரத் என்சிஏபி மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESC), ISOFIX மவுண்ட்கள் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை இதன் பாதுகாப்பு அம்சங்களாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்கள் அனைத்தும் 5 நட்சத்திர பாரத் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டை கொண்டிருந்தாலும், இவற்றுள் ஒன்றை வாங்கும் முன் சில முக்கிய காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்கள் மட்டுமே ரூ.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் வருகின்றன. உயர்தர டாப் வேரியண்ட்களின் விலைகள் இந்த வரம்பை மீறும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட கார் வேரியண்டில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்ப்பது முக்கியம். மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் காரின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கலாம். பாரத் என்சிஏபி மற்றும் குளோபல் (Global) என்சிஏபி சோதனை வழிமுறைகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் சர்வதேச தரங்களுடன் ஒத்துப்போகின்றன. இந்திய சந்தைக்கு ஒரு காரின் BNCAP மதிப்பீடு மிகவும் தேவையானது.


Click it and Unblock the Notifications









