டேங்கை ஃபுல் பண்ணிட்டா 1,300கிமீ-க்கு எங்கேயும் நிறுத்த வேண்டாம்! பென்ஸ் தயாரிப்புனாலே தனி ஸ்பெஷல் தானே!
நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கான பேருந்துக்களை உருவாக்குவதற்கான மேம்பட்ட திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 19.5 டன் எடையுள்ள புதிய 'பிபி1924' (BB1924) சேசிஸை பாரத்பென்ஸ் (Bharat Benz) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) நிறுவனத்தின் கீழ் செயல்படும் பாரத்பென்ஸ் தயாரித்த இந்த BB1924, அதன் 19,500 கிலோ மொத்த வாகன எடை (GVW) மூலம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் விரும்பும் பேருந்து இயக்குநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சேசிஸ் 51+1+1 இருக்கைகள் வரை அமைக்க அனுமதிக்கிறது; மேலும் அதிக சுமையையும் ஏற்றிச் செல்ல முடியும். ஒஎம்926 6-சிலிண்டர் பிஎஸ்6 OBD-II டீசல் என்ஜின் மூலம் இயங்கும் இந்த பஸ் சேசிஸ், அதிகப்பட்சமாக 241 பிஎச்பி சக்தியையும், 850 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. நெடுஞ்சாலைப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட 6-ஸ்பீடு சின்க்ரோமெஷ் கியர்பாக்ஸ் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

380 லிட்டர் கொள்ளளவில் டீசல் டேங்கை கொண்ட இந்த பேருந்து, டேங்க் முழுவதுமாக நிரப்பினால் அதிகப்பட்சமாக 1,300 கிமீக்கும் அதிகமான தூரத்திற்கு இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை-புனே, டெல்லி-ஜெய்ப்பூர் மற்றும் சென்னை-பெங்களூரு போன்ற நீண்ட வழித்தடங்களில் டீசல் நிரப்பும் நேரத்தைக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சேவை நிறுவனங்களுடன் பாரத்பென்ஸ் BB1924 ஏற்கனவே கள சோதனைகளை முடித்துள்ளது. இந்த சேசிஸில் உருவாக்கப்படும் பேருந்தை சர்வீஸ் செய்வதற்கான கால இடைவெளிகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன; முதல் சர்வீஸ் 60,000 கிமீ தொலைவிலும், அதற்குப் பிறகு ஒவ்வொரு 1,20,000 கிமீ தொலைவிற்கும் மேற்கொண்டால் போதும். இது பராமரிப்பு தொடர்பான நேரத்தைக் குறைக்கும்.
இந்த சேசிஸ் 10-15 ஆண்டுகள் சேவை ஆயுளைக் கொண்டது என பாரத்பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் புதிய ஹெவி-டூட்டி பிளாட்ஃபார்ம் ஆனது இரு முனைகளிலும் நியூமேடிக் சஸ்பென்ஷன், ஆன்டி-ரோல் பார்கள் மற்றும் 255 x 73.3 x 7 மிமீ அளவுள்ள அதி வலிமைமிக்க ஸ்டீல் ஃப்ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பேருந்தின் வலிமையான கட்டமைப்பை உறுதி செய்கிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பிரேக்-ஹோல்ட் அசிஸ்ட் அம்சங்களை BB1924 உள்ளடக்கியுள்ளது. மேலும், இந்த சேசிஸின் EBD உடன் ABS, எலக்ட்ரானிக் வைகல் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (EVSC) மற்றும் 5-நிலை மின்காந்த ரிடார்டர் ஆகியவை பிரேக் தேய்மானத்தை 40% வரை குறைக்கலாம் என பாரத்பென்ஸ் கூறுகிறது.
தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட மிச்செலின் 'Michelin' நிறுவனத்தின் 295/80 22.5-இன்ச் அளவுள்ள ரேடியல் ட்யூப்லெஸ் டயர்கள் சிறந்த சாலைப் பிடியை வழங்குகின்றன. ஓட்டுநருக்கு தேவையான தகவல்கள் TFT டிஸ்ப்ளே மூலம் வழங்கப்படுகின்றன. தொழிற்நுட்ப மென்பொருள் சார்ந்த டெலிமேட்டிக்ஸ் அடிப்படையிலான விரிவான ஓட்டுநர் பயிற்சி மற்றும் முன்கூட்டியே பழுதை கண்டறியும் வசதியையும் பாரத்பென்ஸ் வழங்குகிறது.
இந்த சேசிஸ் பாரத்பென்ஸின் நாடு முழுவதும் உள்ள 398 அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். சிறிய மற்றும் நடுத்தர பேருந்து இயக்குநர்களுக்கு எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய, இந்த பிராண்ட் 15க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் NBFC-களுடன் இணைந்துள்ளது. இது 8.5% முதல் தொடங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரையிலான மாதத்தவணை திட்டங்களை வழங்குகிறது.
ஒவ்வொரு BB1924 மாடலுக்கும் 6 ஆண்டுகள்/6 லட்சம் கிமீ பவர்டிரெய்ன் வாரண்டி மற்றும் அதே கால அளவிற்கான விருப்பமான AMC (Annual Maintenance Contract) தொகுப்புகள் கிடைக்கின்றன. பாரத்பென்ஸ் நிறுவனம் 92% உள்நாட்டு உற்பத்தி நிலை மற்றும் நாடு தழுவிய விநியோகச் சங்கிலி மூலம் 24-48 மணி நேரத்திற்குள் 95% உதிரிபாகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகக் கூறுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பேருந்துத் தொழில் தற்போது 51.09 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 5.36% என்கிற வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணங்களுக்கு ஏற்றதாக BB1924-ஐ பாரத்பென்ஸ் வடிவமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








