50 வருடங்களில் எத்தனை மாற்றங்களை பார்த்திருக்கும்... முழுக்க முழுக்க சென்னை ஆலையில் தான் உற்பத்தி!
பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தில் இருந்து உலகளவில் பிரபலமான கார்களுள் ஒன்று, 3-சீரிஸ் (3-Series) ஆகும். இந்தியாவிலும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அளவிற்கு உலகளவில் வரவேற்பை பெற்று வரும் 3-சீரிஸ் கார்களின் விற்பனையில் இந்த உயரத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒன்றும் எளிதாக அடைந்துவிடவில்லை. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 50 வருட உழைப்பு இதில் உள்ளது.
3-சீரிஸ் கார்களை முதல்முறையாக உருவாக்க ஆரம்பித்து 50 வருடங்களை கடந்திருப்பதை பிஎம்டபிள்யூ நிறுவனம் இரு புதிய ஸ்பெஷல் எடிசன் (Special Edition) கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்து கொண்டாடி உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் 3-சீரிஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஸ்பெஷல் எடிசன்களுக்கு '50 ஜஹ்ரே' (50 Jahre) என பிஎம்டபிள்யூ நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது.

3-சீரிஸ் காரின் 50 வருட நிறைவை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த புதிய ஸ்பெஷல் எடிசன்களாவன, 330எல்ஐ எம் ஸ்போர்ட் 50 ஜஹ்ரே எடிசன் மற்றும் எம்340ஐ 50 ஜஹ்ரே எடிசன் ஆகும். இதில், 330எல்ஐ எம் ஸ்போர்ட் 50 ஜஹ்ரே எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64 லட்சமாகவும், எம்340ஐ 50 ஜஹ்ரே எடிசனின் விலை ரூ.76 லட்சத்து 90 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டு இருப்பது, காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் (On-road Prices) இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும் என்றாலும், இவை பணக்காரர்களால் வாங்கக் கூடியவை ஆகும். இருப்பினும், இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களை வாங்குவதில் ஒரு பிரச்சனை உள்ளது.

அது என்னவென்றால், இந்த ஸ்பெஷல் எடிசன்கள் இந்தியா முழுவதுமே தலா 50 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இதனால்தான், இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களை வாங்க விரும்புபவர்கள் உடனடியாக முன்பதிவு செய்யும்படி கூறுகிறோம். மற்ற பெரும்பாலான பிஎம்டபியூ கார்களை போலவே, இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களும் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
விருப்பப்படுபவர்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்களில் மட்டுமின்றி, அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் முன்பதிவு செய்யலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், 330எல்ஐ எம் ஸ்போர்ட் 50 ஜஹ்ரே எடிசன் காரில் ஷேடோவ்லைன் பேக்கேஜ் (Shadowline Package) போன்ற சில அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அதேநேரம், காரின் முன்பக்கத்தில் கிரில், ஜன்னல் கண்ணாடிகளின் பார்டர்கள், டிஃப்யூசர் மற்றும் பின்பக்க சைலன்சர் குழாய்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
மறுப்பக்கம், எம்340ஐ 50 ஜஹ்ரே எடிசனில் காரை சுற்றிலும் பளபளப்பான கருப்பு நிறத்தில் எம் முத்திரைகள், ஜெட் கருப்பு நிறத்தில் 19-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் சிவப்பு நிறத்தில் எம் ஸ்போர்ட் பிரேக் காலிபர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 3 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் அதிகப்பட்சமாக 369 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் 50 வருடங்கள் என்கிற இமாலய மைல்கல்லை கடந்திருப்பதில் இருந்து பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார் எந்த அளவிற்கு உலக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதை அறியலாம். கடந்த 50 வருடங்களில் பல்வேறு விதமான பரிணாம வளர்ச்சியை 3-சீரிஸ் செடான் கார்கள் கண்டுள்ளன. அதனை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசன்களை வாங்க விரும்புவோர் உடனடியாக காரை புக் செய்யவும்.


Click it and Unblock the Notifications









