பிஎம்டபிள்யூ கம்பெனிக்கு என்னவொரு தாராள மனசு! காரின் விலையை உயர்த்தாதற்கே எல்லாரும் வாங்க போறாங்க!
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ (BMW), இந்தியாவில் தனது புதிய 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் (5-Series LWB) காரை எந்த விலை மாற்றமும் இல்லாமல் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.73,35,000 ஆக மாறாமல் உள்ளதுடன், புதிய ஜிஎஸ்டி (GST) திருத்தம் மூலம் கிடைக்கும் சலுகைகளையும் பெறுகிறது.
இந்த சலுகைகள் குறித்த விபரங்கள் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுகளில் புதிய பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் உதவி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பிஎம்டபிள்யூ கார் '530எல்.ஐ எம் ஸ்போர்ட் லாங்-வீல்பேஸ்' (530Li M Sport LWB) என்கிற வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சங்களின்படி, காரின் உட்புற அனுபவத்தை மேலும் மேம்படுத்தி, விசாலமான உணர்வை அளிக்கும் வகையில் 'ஸ்கை லவுஞ்ச் பனோரமிக் கிளாஸ் சன்ரூஃப்' 5-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LED அடிப்படையிலான லைட்டிங் செட்-அப்கள் காரின் உட்புற சூழலை மேலும் மெருகேற்றுகிறது. பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்தும் நோக்கில், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரில் 'டிரைவிங் அசிஸ்டன்ட் பிளஸ்' பாதுகாப்பு தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
இதில், சாலையில் கார் பாதை மாறினால் அதுகுறித்த வார்னிங், கார் முன்பக்கமாகவோ (அ) பின்பக்கமாகவோ மோதலுக்கு உள்ளாக போவது குறித்த எச்சரிக்கை (ஃபிரண்ட் & ரியர்-கோலிஷன் வார்னிங்), ஸ்டாப் & கோ அம்சத்துடன் கூடிய ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸில் வரும்போது குறுக்கே வாகனம் வந்தால் அதுகுறித்த க்ராஸ்-ட்ராஃபிக் வார்னிங் போன்ற அட்வான்ஸ்டு அம்சங்கள் அடங்குகின்றன.
மற்றப்படி, இந்தக் காரில் அதே 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 48V மைல்ட்-ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் ரியர்-வீல்-டிரைவ் (RWD) அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 258 பிஎஸ் ஆற்றலையும், 400 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மைல்ட் ஹைபிரிட் சிஸ்டம் கூடுதலாக 8.5 kW (11 hp) ஆற்றலையும், 25 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இவற்றின் உதவியுடன் இந்த செடான் கார் மணிக்கு 250 கி.மீ உச்ச வேகத்தை எட்டக்கூடியது. மேலும், 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் அடைந்துவிடும். காரின் வெளிப்புற வடிவமைப்பைப் பார்க்கும்போது, ஏரோடைனமிக் பம்பர்கள் மற்றும் சிற்ப வேலைப்பாடுடன் கூடிய பக்கவாட்டுப் பேனல்களுடன் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

காரின் முன்புறத்தில் ஒளிரும் 'கிட்னி' வடிவ கிரில், அடாப்டிவ் LED ஹெட்லைட்கள் மற்றும் DRL-கள் அமைந்துள்ளன. மேலும், 19-இன்ச் M லைட்-அலாய் சக்கரங்கள் இதன் தோற்றத்திற்கு தனித்துவமான அழகைச் சேர்க்கின்றன. சால்ட் அலுமினியம் எக்ஸ்டீரியர் லைன் காருக்கு உயர்தர மெருகூட்டலை அளிக்கிறது. இது C-பில்லர் வரை நீண்டு, அங்கு '5-சீரிஸ்' என்ற காரின் பெயர் பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.
காருக்குள் கேபினில் உயர்தர வீகன் பொருட்களால் மூடப்பட்ட, சிற்ப வேலைப்பாடுடன் கூடிய இருக்கைகள் மற்றும் பிரிமீயம் டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி இடம்பெற்றுள்ளது. மேலும், மரத்தாலான டாஷ்போர்டு மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகள் உள்ளன. சென்டர் கன்சோல் பகுதியானது கண்ணாடி ஃபினிஷிங் உடன், பல கண்ட்ரோல்களை உள்ளடக்கி பிரிமீயம் உணர்வை வழங்குகிறது.
கூடுதல் அம்சங்களாக 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோலுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங், நீண்ட வீல்பேஸ் காரணமாக அதிகரித்த பின்புற லெக்ரூம், இரட்டை-திரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்ட BMW லைவ் காக்பிட் பிளஸ், டிஜிட்டல் கீ பிளஸ், கனெக்டட் டிரைவ் ஆகியவை 5-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரில் வழங்கப்படுகின்றன.
மேலும், முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கான வயர்லெஸ் சார்ஜிங், 18 ஸ்பீக்கர்கள் கொண்ட 655 வாட் பவர்ஸ் & வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் நீண்ட பயணங்களின் போது அதிக ஆடம்பரத்தையும் ஓட்டுநர் வசதியையும் வழங்கும் வகையில் முன்புற வென்டிலேட்டட் இருக்கைகளும் இந்த காரில் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காருக்கு இந்தியாவில் ஏற்கனவே பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் காரின் கம்பீரமான தோற்றத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், காரின் விலை அதிகரிக்கப்படாதது ஆகும்.


Click it and Unblock the Notifications








