85,000 கோடி முதலீடு.. ஆண்டுக்கு 6லட்சம் யூனிட் கார் உற்பத்தி.. இந்த ஜாக்பாட் எந்த மாநிலத்துக்கு அடிக்க போகுது?
டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு உலக அளவில் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கார் பிராண்டாக பிஒய்டி (BYD) உள்ளது. இது ஓர் சீன வாகன உற்பத்தி நிறுவனம். இதன் முக்கிய தயாரிப்பாக எலெக்ட்ரிக் வாகனம் (EV)-கள் உள்ளன. இந்த நிறுவனமே இந்தியாவில் மிகப் பெரிய கார் உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதிக்க இருக்கும் தகவல் சில தினங்களுக்கு முன்னரே உறுதியாகியது.
குறிப்பாக, நிறுவனத்தின் செயல்பாடுகளாலேயே அது உறுதி செய்யப்பட்டது. அதாவது, பணியாட்களை நிர்ணயிப்பது, ஷோரூம்களுக்கான இடங்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய வேலைகளிலேயே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால் இன்னும் ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களில் டெஸ்லா இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அதன் வருகையை பதிவு செய்துவிடும் என நம்பப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே டெஸ்லா நிறுவனத்திற்கு உலக அளவில் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப்போலவே இந்தியாவிலும் கூடுதல் போட்டியை அளிக்கும் விதமாக பிஒய்டி நிறுவனம் செயல்பட தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்க இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய ஆலை ஹைதராபாத்தில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், மிகப் பெரிய ஜாக்பாட் தெலங்கானா மாநிலத்திற்கு அடித்து இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. பிஒய்டி நிறுவனத்தின் புதிய வாகன உற்பத்தி ஆலைக்காக தெலுங்கானா மாநில அரசு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த புதிய ஆண்டு ஒன்றிற்கு சுமார் 6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், இன்னும் ஏழாண்டுகளில் புதிய உற்பத்தி ஆலை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிய வந்திருக்கின்றது. அதாவது, 2032 ஆம் ஆண்டிலேயே பிஒய்டி நிறுவனத்தின் புதிய ஆலை ஹைதாராபத்தில் செயல்பட தொடங்கும்.
நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக இ-மேக்ஸ் 7 (eMax 7), அட்டோ 3 (Atto 3), சீல் (Seal) மற்றும் சீ-லையன் 7 (Sealion 7) உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றையே இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது, பிஒய்டி. இதுதவிர இன்னும் சில புதுமுக கார் மாடல்களையும் அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே கார் உற்பத்தியை ஆலையை அமைக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது, பிஒய்டி. இங்கு இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் கார் மாடல்கள் மட்டுமின்றி உலக நாடுகளுக்கான தயாரிப்புகள் சிலவற்றையும் நாட்டில் வைத்து உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, இந்திய ஆலையை உலக சந்தைக்கான தொழிற்சாலையாக பிஒய்டி பயன்படுத்திக் கொள்ளும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக சந்தையில் டெஸ்லா நிறுவனத்திற்கு முக்கிய எதிராலியாக பிஒய்டி நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டெஸ்லாவிற்கு இந்தியாவிலும் மிகப் பெரிய போட்டியாளனாக விளங்கும் பொருட்டு புதிய ஆலையை அமைப்பதற்கான பணியில் பிஒய்டி தீவிரமாகக் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications









