சீன பொருட்களுக்கு தடை எல்லாம் சும்மா தான்... அடுத்ததாக இந்தியா வரும் சீன கார் - அறிமுக தேதி அறிவிச்சாச்சு
பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனம். இந்தியா தான் இந்த நிறுவனத்தின் அடுத்த டார்க்கெட்டாக உள்ளது. அடுத்த டார்க்கெட் என சொல்வதை காட்டிலும், இந்திய கார்கள் மார்க்கெட்டில் வலுவாக கால்பதிக்க பிஒய்டி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. அதன் ஒருபகுதியாக, தனது புதிய சீலயன் 7 (SeaLion 7) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஒய்டி நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய எலக்ட்ரிக் கார் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்கிற விபரங்கள் தேதியுடன் வெளியாகி உள்ளன.
உலகிலேயே பலத்த போட்டி மிகுந்த கார் சந்தையாக நம் அண்டை நாடான சீனாவை சொல்லலாம். அதிலிலும், எலக்ட்ரிக் கார்களுக்கு உலகம் முழுவதிலும் அதிக தேவை ஆரம்பித்த பிறகு சீன கார்கள் மார்க்கெட் இன்னும் அதிக போட்டி மிகுந்ததாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகைய சீன நாட்டில் தனது தரமான எலக்ட்ரிக் கார்கள் மூலமாக கோலோச்சி வரும் பிஒய்டி நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமாக இருப்பினும், பிஒய்டி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்கு ஐரோப்பாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதில் கிடைத்த தைரியத்தில், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த கடந்த சில வருடங்களாகவே காய் நகர்த்திவரும் பிஒய்டி அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் சீலயன் 7 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. நம் நாட்டில் இது பிஒய்டி நிறுவனத்தின் 4வது எலக்ட்ரிக் கார் ஆகும்.

சீனா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீலயன் 7 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அன்றைய தினத்தில்தான் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சீல்யன் 7 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட உள்ளன.
சீலயன் 7 எலக்ட்ரிக் காரை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய பிஒய்டி நிறுவனம் அப்போதே காரை பற்றிய முக்கிய விபரங்களை வெளியிட்டது. அதனை தொடர்ந்து, இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

விருப்பமுள்ளவர்கள் ரூ.70,000 என்கிற டோக்கன் தொகையை செலுத்தி புதிய சீலயன் 7 எலக்ட்ரிக் காரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் என 2 விதமான வேரியண்ட்களில் இந்த புதிய பிஒய்டி எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவை இரண்டிலும் 82.5kWh பேட்டரி பேக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலைமிக்க பிஒய்டி எலக்ட்ரிக் காராக சீலயன் 7 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அந்த அளவிற்கு இந்த காரின் விலை சற்று அதிகமாக இருக்கும். பிப்.17இல் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே வருகிற மார்ச் மாதத்தில் இருந்து இந்த காரை கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படலாம். அதாவது, வரும் மார்ச் மாதத்தில் இருந்து இந்த சீன எலக்ட்ரிக் காரை இந்திய சாலைகளில் காணலாம்.


Click it and Unblock the Notifications









