டெலிவரிக்கு ஒரு மாசம் இருக்கு.. அதுக்குள்ள புக்கிங் குவியுது.. அப்படி என்னதான் இருக்கு இந்த சீன நிறுவன காருல!
பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD Auto) இந்தியாவின் மின்சார கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக சீ-லையன் 7 (Sealion 7) எனும் மின்சார கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 48.9 லட்சம் விலையை சீன நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 54.90 லட்சமாக உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காருக்கே இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர் என்பது தெரிய வந்து உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த காருக்கு 1,000க்கும் அதிகமான புக்கிங் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தனைக்கும் இந்த காரின் டெலிவரி பணிகள் அடுத்த மாதம் மத்தியிலேயே தொடங்கப்பட திட்டமிட்டுள்ளது. இதற்குள்ளாகவே இந்தியர்கள் பலர் இந்த காரை வேகமாக புக் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இரண்டு விதமான வேரியண்டுகளில் பிஒய்டி சீ-லையன் 7 விற்பனைக்குக் கிடைக்கும். பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும்.
இதில், பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் பெயருக்கு ஏற்ப அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. அதன் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 523 பிஎச்பி மற்றும் 690 என்எம் டார்க்கை பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் வெளியேற்றும்.

அதேவேளையில், பிரீமியம் வேரியண்ட்டோ 308 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும். இதில் சிங்கிள் மோட்டார் மட்டுமே வழசங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் அனைத்து ஆக்ஸிலும் ஓர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும். ரேஞ்சைப் பொருத்த வரை பிரீமியம் வேரியண்ட்டே அதிகம் தரக் கூடியதாக இருக்கின்றது.
அது ஓர் முழு சார்ஜில் 567 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்கும். அதேவேளையில் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டோ ஓர் முழு சார்ஜில் 542 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்கும். ஆனால் இரண்டிலுமே 82.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கும்.
இந்த காரை அதிக திறன் மற்றும் ரேஞ்ச் தரக் கூடியதாக மட்டுமல்ல அதிக பாதுகாப்பை தரக் கூடியதாகவும் பிஒய்டி நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. 11 ஏர் பேக்குகள், அடாஸ் அம்சம் உள்ளிட்டவற்றையே அது இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை பயன்படுத்தும் பணக்காரர்கள் மத்தியிலேயே இந்த நிறுவனம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொம்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இவர்களைக் கவரும் வகையிலேயே தற்போது களமிறங்கி இருக்கும் சீ-லையன் 7 எலெக்ட்ரிக் காரும் உள்ளது.


Click it and Unblock the Notifications








