ஆடி, பென்ஸை தெய்வம்தான் காப்பத்தணும்.. அரசனை அலங்கரிப்பதை போல காரை அலங்கரித்திருக்கும் சீன நிறுவனம்!
டெஸ்லாவுக்கே சவால் விடுக்கும் நிறுவனமாக வளர்ந்து இருக்கும் கார் பிராண்டே பிஒய்டி (BYD). இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் பணக்காரர்களை மட்டுமே இந்த நிறுவனம் கவர்ந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய இருப்பை மேலும் வலுவானதாக மாற்றும் முயற்சியில் பிஒய்டி களமிறங்கி இருக்கின்றது.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-வில் சீ-லையன் (SeaLion) எனும் கார் மாடலை அது வெளியீடு செய்தது. இதை அடுத்து யாங்வாங் யு8 எனும் கார் மாடலையும் அது காட்சிப்படுத்தியது.

இது ஓர் பிளக்-இன் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார் மாடல் ஆகும். நம்ப முடியாத திறன்களைத் தாங்கி இருக்கும் எலெக்ட்ரிக் காராகவும் இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இந்த காரை அலங்கரித்திருக்கும் விதமே பலரைக் கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. எந்த காரிலும் காண முடியாத தனித்துவமான அமைப்பைக் கொண்ட ஹெட்லைட்டையே பிஒய்டி இந்த காரில் வழங்கி இருக்கின்றது.
இந்த ஹெட்லைட் குட்டி குட்டி டைமைண்ட் கற்களைப் போல காட்சியளிக்கின்றது. இதிலேயே இன்டிகேட்டரும் இடம் பெற்றிருக்கின்றது. அது மெல்லிய கோடு போன்று இருக்கின்றது. இத்துடன், முற்றிலும் மாறுபட்ட லுக் கொண்ட கிரில், பம்பர் மற்றும் வீல்கள் ஆகியவற்றையும் இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக வழங்கியிருக்கின்றனர்.

இந்த மாதிரியான வேலைப்பாட்டால் யாங்வாங் யு8 கார்களின் அரசனைப் போல காட்சியளிக்கின்றது. இந்த கார் பார்க்க மட்டுமல்ல பயன்பாட்டிலும் தனித்துவமானதாக இருக்கும். சொல்லப்போனால் இந்த கார் சாலையில் மட்டுமல்ல நீரிலும் பயணிக்கும். இந்த திறன் யாங்வாங் யு8-க்கு உண்டு. நீரில் இதனால் சுமார் 30 நிமிடங்கள் மிதக்க முடியும் என கூறப்படுகின்றது.
மேலும், மொத்தமாக ஐந்து பேர் வரை அதில் அமர்ந்து பயணிக்க முடியும். உலக சந்தையில் இந்த காரை பிஒய்டி நிறுவனம் யாங்வாங் எனும் பிராண்டிலேயே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இது விற்பனைக்கு வரும் எனில் பிஒய்டி பிராண்டின்கீழ் யு8 எனும் பெயரிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் யு8 பெயரில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். லேண்ட் ரோவர் கார்களில் காணப்படுவதைப் போல ஃப்ளஷ் வகை கைப் பிடிகள், பன்முக ஜோன்கள் கொண்ட ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 22 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், பவர் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவற்றையும் இது தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த காரில் 1,200 பிஎஸ் திறன் மற்றும் 1,280 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் அம்சம் இரண்டின் வாயிலாகவும் சுமார் 1,000 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதாவது, ஃபுல் டேங்க் செய்தும், பிளக்-இன் வாயிலாக முழுமையாக சார்ஜ் செய்தாலே இந்த அளவு அதிக ரேஞ்சைப் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி யாங்வாங் யு8 இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும் எனில் ஆடி, பென்ஸ் போன்ற பெரு நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








