10 லட்ச ரூபாய் காரில் இது எல்லாம் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே மாட்டீங்க! இந்த 3 கார்கள் மட்டும்தான்...
10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் கார்களில், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட டேஷ்கேமரா (Dashcam) வசதியுடன் கிடைக்கும் கார்கள் என்று பார்த்தால், ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரையும், ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ட்ரைபர் (Triber) கார்களின் சிறப்புப் பதிப்புகளையும் சொல்லலாம்.
இந்த கார்களின் சில வேரியண்ட்கள் டூயல்-சேனல் (Dual-channel) டேஷ் கேமராக்கள் உடன் கிடைக்கின்றன. டேஷ் கேமரா என்பது காரினுள் டேஸ்போர்டில் பொருத்தப்படும் கேமராக்களை குறிப்பதாகும். டூயல்-சேனல் என்பது காரின் முன்பக்கத்தையும், உட்புறத்தையும் என இரண்டையும் காட்சி பதிவு செய்பவை ஆகும். இதனால் இது பல ஓட்டுநர்களுக்கு முக்கிய பாதுகாப்பு அம்சமாக கருதப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர்: ஹூண்டாய் எக்ஸ்டர் ஒரு மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார் ஆகும். இந்தியாவில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட இரட்டை டேஷ்கேமரா உடன் விற்பனைக்கு வந்த முதல் கார் இதுதான். எக்ஸ்டரில் முன்புறம் மற்றும் உட்புறம் ஆகிய இரண்டையும் பதிவு செய்யும் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது.
மேலும், 2.31 அங்குல டிஸ்பிளேவும் இந்த கேமரா செட்-அப்பில் அடங்கும். டூயல்-சேனல் கேமரா அம்சம் ஆனது எக்ஸ்டர் காரின் டாப் வேரியண்ட்டான எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் (SX(O) Connect) வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் பொதுவாக ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) கிடைக்கிறது.

ரெனால்ட் கைகர் (சிறப்புப் பதிப்பு): ரெனால்ட் கைகர் ஆனது மேலே கண்ட எக்ஸ்டரை விட அளவில் சற்று பெரிய காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் ஆகும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் இதன் 'அர்பன் நைட்' (Urban Night) என்ற சிறப்பு பதிப்பில் இரட்டை கேமரா செட்-அப் கொண்ட டேஷ்கேமரா வசதி வழங்கப்படுகிறது. கைகரின் அர்பன் நைட் பதிப்பில் 'ஸ்மார்ட் வியூ' மானிட்டர் ('Smart View' Monitor) இடம்பெறுகிறது.
இது காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தை பதிவு செய்யும் இரட்டை கேமரா டேஷ் கேமராவாக செயல்படுகிறது. இந்த அம்சம் ஆனது கைகரின் விலைமிக்க ஆர்.எக்ஸ்.இசட் (RXZ) வேரியண்ட் அடிப்படையிலான அர்பன் நைட் பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. 2023 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சிறப்புப் பதிப்புகள் 300 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளதால், கைகர் அர்பன் நைட் எடிசன் கார் சில ஷோரூம்களில் கிடைக்காமல் போகலாம்.

ரெனால்ட் ட்ரைபர் (சிறப்புப் பதிப்பு): ரெனால்ட் ட்ரைபர் ஆனது விலை குறைவான ஒரு பட்ஜெட் ரக எம்பிவி (MPV) கார் ஆகும். கைகரைப் போலவே, இதுவும் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் டேஷ்கேமரா உடன் ஒரு சிறப்புப் பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், கைகர் அர்பன் நைட் எடிசனை போன்று ட்ரைபர் அர்பன் நைட் எடிஷனிலும் இரட்டை கேமரா ஸ்மார்ட் வியூ மானிட்டர் வழங்கப்படுகிறது.
ட்ரைபரின் உயர்தர ஆர்.எக்ஸ்.இசட் (RXZ) வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்ட அர்பன் நைட் சிறப்புப் பதிப்பில் இந்த கேமரா வசதி கிடைத்து வருகிறது. டாப் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டதாக இருப்பினும், ட்ரைபர் அர்பன் நைட் ஸ்பெஷல் எடிசனின் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. ட்ரைபர் அர்பன் நைட் எடிசனும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஒரு லிமிடெட் எடிஷன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் கார்களில் டேஷ்போர்டு கேமரா வழங்கப்படுவது குறைவுதான். இருப்பினும், டேஷ்கேமராவின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் இந்த கேமரா வசதி இன்னும் பல விலை குறைவான கார்களிலும் வழங்கப்படலாம். கார்களில் கட்டாயமாக 6 ஏர்பேக்குகள் (Airbags) இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவதை போல, வரும் காலங்களில் கார்களில் டேஷ் கேமரா இருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படலாம்.


Click it and Unblock the Notifications









