4 சக்கரங்களிலும் டிஸ்க் பொருத்துவது ரொம்ப குறைவுதான்! கரெக்ட்டா பார்த்து வாங்குனா ரூ.10 லட்சத்தில் வாங்கிடலாம்
எந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும், காரில் முக்கியமானது பிரேக் (Brake) ஆகும். கார் ஒன்றை முதல்முறையாக கண்டுப்பிடித்த மனிதன் அதில் முதலாவதாக பொருத்தியிருக்கும் பாகம், அதனை நிறுத்துவதற்கான பிரேக் ஆகவே இருந்திருக்கும். இன்றைய கால கார்களில் பிரேக் சிஸ்டம் பல விதமான பரிணாம வளர்ச்சியை சந்தித்துள்ளது.
ஓரளவிற்கு மக்கள் அதிகம் பேரால் வாங்கப்படும் கார்களில் தற்போதைக்கு சிறந்த பிரேக் சிஸ்டம் ஆக வழங்கப்படுவது டிஸ்க் (Disc) பிரேக் ஆகும். காரின் அனைத்து 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது என்றால் அது வாங்குவதற்கு ஏற்ற கார். அவ்வாறு, சக்கரங்கள் அனைத்திலும் டிஸ்க் பிரேக் உடன் மார்க்கெட்டில் ரூ.10 லட்சத்திற்குள் விற்பனை செய்யப்படும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு, சிறப்பாக விற்பனையாகி வரும் காரான இதில் அனைத்து வேரியண்ட்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உடன் வாங்குவதற்கு எங்களது பரிதுரைப்பு இந்த மஹிந்திரா கார் என்பதாலேயே இதனை முதலாவதாக பார்த்துள்ளோம்.
பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை 4-சக்கர டிஸ்க் உடன் ரூ.10 லட்ச ரூபாய்க்குள் எம்.எக்ஸ்1 மற்றும் எம்.எக்ஸ்2 வேரியண்ட்களில் வாங்கலாம். எம்.எக்ஸ்1 வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும், எம்.எக்ஸ்2 வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்படுகிறது.

டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): ரூ.10 லட்சத்திற்குள் சக்கரங்கள் அனைத்திலும் டிஸ்க் பிரேக் உடன் எலக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த டாடா எலக்ட்ரிக் கார் ஏற்றதாக இருக்கும். அதுவும், ரூ.10 லட்சத்திற்குள் வாங்குவதாக இருந்தால் பஞ்ச் இவி எலக்ட்ரிக் காருக்கான பேட்டரியை குத்தகை முறையில்தான் வாங்க வேண்டும்.
டாடா மோட்டார்ஸின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் என்பதால், ரூ.10 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் பஞ்ச் இவி காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான லாங்-ரேஞ்சையே வாங்கிவிடலாம். டாடா உருவாக்கும் அளவில் சிறியதான பஞ்ச் காரின் எலக்ட்ரிக் வெர்சன் தான் பஞ்ச் இவி ஆகும்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line): ஹூண்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான ஐ20 -இன் செயல்திறன்மிக்க வேரியண்ட் தான் ஐ20 என் லைன் ஆகும். இதனாலேயே இந்த காரிலும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், காரின் எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.10 லட்சமாக உள்ளது.

எம்ஜி அஸ்டர் (MG Astor): எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு பெரியதாக சோபிக்காமல் போன கார் இதுவாகும். இந்த எம்ஜி காரின் விலை குறைவான ஸ்பிரிண்ட் (Sprint) வேரியண்ட் ரூ.10 லட்சத்திற்குள் டிஸ்க் பிரேக் உடன் கிடைக்கிறது. ஆனால், அஸ்டர் ஸ்பிரிண்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையும் கிட்டத்தட்ட ரூ.10 லட்சமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இருந்தால் கார் ஓட்டும்போது இன்னும் கூடுதல் நம்பிக்கை கிடைக்கும். 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளை பெறுவதற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கார்களை வாங்க வேண்டும் என்றில்லை. அத்தகைய கார்கள் ரூ.10 லட்சத்திற்கு குறைவாகவும் கிடைக்கின்றன. அவற்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்தோம்.


Click it and Unblock the Notifications









