மொபைல் போனை சார்ஜ் செய்ய காரில் இந்த வசதி இல்லாமல் இருந்தால் எப்படி? ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பதுதான் ஹைலைட்
வயர்லெஸ் போன் சார்ஜிங் (Wireless Phone Charging), இன்றைய கால கார்களில் மக்கள் பலரும் விரும்பக்கூடிய அம்சமாக மாறிப்போன ஒன்று. மொபைல் போனை சார்ஜ் செய்ய சார்ஜிங் கேபிளை தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மொபைல் போனை முன் இருக்கைக்கு மத்தியில் வழங்கப்பட்டு இருக்கும் சார்ஜிங் பெட்டகத்தில் வைத்தாலே போதும், போன் தானாக சார்ஜ் ஆகும். இத்தகைய வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜிங் வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த கார்களை பற்றி இனி பார்க்கலாம்.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கொரியன் ஸ்டைலில் விற்பனை செய்யப்படும் கார், எக்ஸ்டர் ஆகும். அளவில் சிறியதான ஹூண்டாய் காராக விளங்கும் எக்ஸ்டர், அதற்கேற்ப விலையும் குறைவானதாக உள்ளது. விலை குறைவான காராக இருப்பினும், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற அசத்தலான அதிநவீன அம்சங்கள் எக்ஸ்டரில் வழங்கப்படுகின்றன.

எக்ஸ்டரில் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த வசதி வழங்கப்படுவது இல்லை. எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் என இரு வேரியண்ட்களில் மட்டுமே இந்த வசதி வழங்கப்படுகிறது. எக்ஸ்டர் காரின் இந்த எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.8.74 லட்சத்தில் இருந்து தற்சமயம் ஆரம்பிக்கின்றன.

டாடா பஞ்ச் (Tata Punch): எக்ஸ்டருக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) ரக கார், பஞ்ச் ஆகும். குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற பஞ்ச் காரின் அக்கம்ப்ளீஷ்டு பிளஸ் வேரியண்ட்டில் இருந்து வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கும் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக ஐ20 விளங்குகிறது. மாடர்னான தோற்றத்தில், பிரீமியம் தரத்திலான கேபின் உடன் உருவாக்கப்படும் ஐ20 காரில் அஸ்டா மற்றும் அஸ்டா (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களில் வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): ஹூண்டாய் ஐ20 காருக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் கார், அல்ட்ராஸ் ஆகும். பஞ்ச் காரை போன்று, குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற அல்ட்ராஸ் காரின் எக்ஸ்.இசட்+ (எஸ்) வேரியண்ட்டில் இருந்து வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதியை டாடா வழங்குகிறது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite): இந்தியாவில் நிசான் நிறுவனம் விற்பனை செய்யும் இரண்டே இரண்டு கார்களுள் மேக்னைட் ஒன்றாகும். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் காரின் எக்ஸ்.வி பிரீமியம் வேரியண்ட்டில் வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு எக்ஸ்வி பிரீமியம் வேரியண்ட்டை டெக் பேக் (Tech Pack) உடன் வாங்க வேண்டும்.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): ரெனால்ட்டும், நிசானும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் நினைக்கிறேன். இந்த கூட்டணியில் நிசான் நிறுவனம் மேக்னைட்டை அறிமுகம் செய்த நிலையில், ரெனால்ட் நிறுவனம் கைகர் காரை அறிமுகம் செய்தது. கைகர் காரின் ஆர்.எக்ஸ்.இசட் வேரியண்ட்டில் இருந்து வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வயர்லெஸ் போன் சார்ஜிங்கின் மூலமாக, குலுக்கல்கள் நிறைந்த பாதையில் செல்லும்போதும் எளிதாக மொபைல் போனை சார்ஜ் செய்ய முடிகிறது. மக்கள் பலரை இந்த வசதி கவர்ந்துள்ளதால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் முடிந்தவரையில் தங்களது கார்களில் இந்த வசதியை வழங்க முயற்சிக்கின்றன. அந்த வகையில், இந்த அதிநவீன வசதி உடன் கிடைக்கும் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்தோம்.


Click it and Unblock the Notifications









