சியட் டயர்களுக்கு மொத்த பேரும் அப்படியே மாற போறாங்க! ஜிஎஸ்டி குறைச்சதால் எல்லா பக்கத்தில் இருந்தும் இலாபம்!
சியட் (CEAT), இந்தியாவில் நீண்ட வருடங்களாக செயல்பட்டு வரும் பிரபலமான டயர் உற்பத்தி நிறுவனம். ஆனால் சியட் நிறுவனம் தோன்றியது எங்கு என்று பார்த்தால், அது இத்தாலி ஆகும். இத்தாலியின் டுரின் என்கிற பகுதியில் சுமார் 101 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட சியட் நிறுவனம் தற்சமயம் உலகின் மிக பெரிய டயர் மார்க்கெட்களுள் ஒன்றான இந்தியாவில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் புதிய ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் பயன்பெறும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் சியட் விளங்குகிறது. அதன்படி, வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வர உள்ள நிலையில், சியட் நிறுவனம் தனது குறிப்பிட்ட வகை டயர்களின் விலைகளை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளது.

மத்திய அரசாங்கம் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் (Council) கூட்டத்தில் அறிவித்த புதிய ஜிஎஸ்டி 2.0 செயல்திட்டத்தால் கார்கள் மற்றும் பைக்குகளின் விலைகள் எந்த அளவிற்கு குறைந்துள்ளன என்பதை தான் இதுவரையில் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். காற்று நிரப்பி பயன்படுத்தும் நியூமேடிக் டயர்களுக்கும் (Pneumatic Tyres) ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு உள்ளது.
நியூமேடிக் டயர்களுக்கான ஜிஎஸ்டி 28%-இல் இருந்து 18% ஆக குறைந்துள்ளது. இந்த வகை டயர்கள் சைக்கிள்களில் இருந்து மோட்டார்சைக்கிள்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் கனரக லாரிகள் வரையில் என அனைத்து விதமான வாகனங்களிலும் பொருத்தப்படுகின்றன. குறிப்பாக, விலை குறைவான வாகனங்களில் தான் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டிராக்டர்களில் பிரத்யேகமான டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

டிராக்டர் டயர்கள் மற்றும் டியூப்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் இன்னும் குறைக்கப்பட்டு வெறும் ஐந்து சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்திலும் ஏழை, எளிய மக்களுக்கு தான் மத்திய அரசு ஜிஎஸ்டியில் குறைப்பு கொண்டுவந்துள்ளது. இதன்படி, இந்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்களின் பலன்களை நுகர்வோருக்கு முழுமையாகப் பகிர்ந்தளிக்கும் வகையில், சியட் நிறுவனம் தனது குறிப்பிட்ட வகை டயர்கள் மற்றும் தயாரிப்புகளின் விலைகளைக் குறைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பின் முழுப் பலனையும் தங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. சியட் லிமிடெட் (Limited) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், CEO-வும் ஆன அர்னாப் பானர்ஜி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், டயர் துறையில் வரி விகிதங்களை முறைப்படுத்திய இந்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தக் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகித வரம்புகளால் டயர் தொழில் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பெரும் பலன் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது பல்வேறு பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாகனம் பயன்படுத்துவதற்கான செலவைக் குறைக்கும் என்றும், டயர்களை மேலும் மலிவானதாக மாற்றுவதன் மூலம் நமது சாலைகளையும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்றும் பானர்ஜி கூறியுள்ளார்.
மொத்தத்தில், இந்த நடவடிக்கை முறைப்படுத்தலையும், வாடிக்கையாளர்கள் உடனான நல்ல இணக்கத்தையும் தூண்டும் என நம்பும் அர்னாப் பானர்ஜி, இது டயர் துறையின் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, தங்களது விலை குறைப்பால் டிராக்டர்கள் மற்றும் சிறிய அளவிலான மோட்டார்சைக்கிள்கள் பெரிய அளவில் பலனை அனுபவிக்கும் என சியட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஜிஎஸ்டி விகிதங்களால் குறைக்கப்பட்ட விலைகள், மேலே குறிப்பிடப்பட்ட சியட் தயாரிப்புகள் அனைத்திலும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலமாக, விலை குறைவான கார்களுக்கான டயர்களின் விலைகளும் சற்று குறையும் என்பதால், விலை குறைவான கார்கள் ஜிஎஸ்டி 2.0 திட்டத்தால் பெற்ற நேரடியான பலனை அனுபவிப்பது மட்டுமின்றி, இவ்வாறு டயர்களுக்கான செலவு குறைவது போன்ற மறைமுகமான பலன்களையும் அனுபவிக்க உள்ளன.
இதன் மூலமாக, ஆட்டோமொபைல் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைவதால், அது அப்படியே அவற்றின் விலைகளில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதுமட்டுமின்றி, நியூமேடிக் டயர்கள் அனைத்து விதமான வாகனங்களிலும் பயன்படுத்தப்படுவதால், தற்போது ஜிஎஸ்டி அதிகரிப்பை எதிர்கொண்டுள்ள விலையுயர்ந்த கார்களிலும் குறைந்த செலவில் டயர்களை வழங்க முடியும்.


Click it and Unblock the Notifications









