மத்திய அமைச்சரை அவரது வீட்டில் கூட சும்மா விட மாட்றாங்களே... காரை வீட்டு வாசலுக்கே கொண்டுப்போய் நிறுத்தியாச்சி
கியா இந்தியா (Kia India) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி காரின் எலெக்ட்ரிக் வெர்சனான புதிய கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Carens Clavis EV) சிறப்பான புக்கிங்கை பெற்று வருகிறது. கடந்த 2025 ஜூலை மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கொரியன்-ஸ்டைல் மாடர்ன் கியா எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளும் அதே ஜூலை மாத இறுதியில் இருந்து துவங்கப்பட்டன.
இன்னும் சொல்லப்போனால், முன்பதிவு செய்தவர்களுக்கு காரை டெலிவிரி செய்யும் பணிகளை கூட கியா விரைவாகவே ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு, கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவருவதில் கியா தீவிரமாக இருந்தது. ஏனெனில், இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்கு முன்னதாகவே எலெக்ட்ரிக் அல்லாத கேரன்ஸ் கிளாவிஸ் காரும், அதன் முந்தைய தலைமுறை மாடலாக கேரன்ஸ் காரும் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தன.

கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 530 கேரன்ஸ் கார்களை இந்தியாவில் கியா விற்பனை செய்துள்ளது. இதில், கேரன்ஸ், கேரன்ஸ் கிளாவிஸ், கேரன்ஸ் கிளாவிஸ் இவி ஆகிய மூன்று கார்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. இந்தியாவில் கேரன்ஸ் என்கிற எம்பிவி ரக காரை இவ்வாறு பல்வேறு விதமான தோற்றங்களில் தொடர்ந்து மக்களிடத்தில் கொண்டுப்போய் சேர்ப்பதில் கியா முனைப்புடன் உள்ளது.
குறிப்பாக, கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் கியா இன்னும் கூடுதல் முனைப்புடன் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் வெளிப்பாடாகவே, கியா இந்தியா நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது முதல் 7 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் காரான கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை, புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரிடம் கொண்டுப்போய் காண்பித்துள்ளது.

புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, தனது புதுடெல்லி இல்லத்தில் இந்த கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை ஓட்டிப் பார்த்தார். இந்த நிகழ்வின்போது, கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுக்கான மூத்த துணைத் தலைவர் திரு.அதுல் சூட் மற்றும் பிற கியா அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கியா கேரன்ஸ் கிளேவிஸ் இவி என்பது 7 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எம்பிவி கார் ஆகும். இது கேரன்ஸ் கிளேவிஸ் மாடலின் எலெக்ட்ரிக் வடிவமாக, இந்திய சந்தைக்கான கியாவின் முதல் உள்நாட்டு எலெக்ட்ரிக் காராக அறிமுகமாகியது. இந்த இவி ஆறு வேரியண்ட்களில் ரூ.17.99 லட்சம் முதல் ரூ.24.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த காரின் அடிப்படை எச்டிகே பிளஸ் (HTK Plus) வேரியண்ட்டின் விலை ரூ.17.99 லட்சம் ஆகவும், உயர்மட்ட எச்டிஎக்ஸ்+ இ.ஆர் (HTX+ ER) வேரியண்ட்டின் விலை ரூ.24.49 லட்சம் ஆகவும் தற்சமயம் உள்ளது. கேரன்ஸ் கிளாவிஸ் இவி கார் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் (42 kWh பேட்டரி, 404 கி.மீ ARAI) மற்றும் எக்ஸ்டென்டட் ரேஞ்ச் (51.4 kWh பேட்டரி, 490 கி.மீ ARAI) என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது.
இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் 169 பிஎச்பி ஆற்றலையும், 255 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்து, சுமார் 8 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை கார் எட்டுகிறது. இது 100kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதால், 39 நிமிடங்களில் இதன் பேட்டரியை 10-80% சார்ஜ் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ள நிறுவனங்களுள் கியாவும் ஒன்றாகும். மத்திய அமைச்சகத்திடம் நேரடியாக கொண்டு சென்று காண்பிப்பதன் மூலம், தங்களது லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் காரின் தரத்தை கியாவால் நேரடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









