4-ஸ்டார் கொடுத்து நாம தூக்கி வைத்து கொண்டாடும் கார்... வெளிநாட்டில் கழுவி ஊத்துறாங்க!
பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சிட்ரோயன் பசல்ட் (Citroen Basalt) கார், சமீபத்திய லத்தீன் என்சிஏபி (Latin NCAP) மோதல் சோதனைகளின் முடிவில் பூஜ்ஜிய நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது. ஏனென்றால், இந்த சிட்ரோயன் கார் நம் இந்தியாவிலும் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவ்வாறான பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிட்ரோன் பசல்ட் கார் அப்போது 4-நட்சத்திர மதிப்பீட்டை பெற்று இருந்தது. பிரேசில், இந்தியா என வெவ்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டாலும், இரண்டு மாடல்களும் சி.எம்.பி (CMP) பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கப்படுபவை ஆகும். பாதுகாப்பு உபகரணங்களில் உள்ள வேறுபாடுகள் தான் இந்த மாறுபட்ட மதிப்பீடுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

பாதுகாப்பு உபகரணங்களில் பிரேசில் மற்றும் இந்திய மாடல்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. லத்தீன் என்சிஏபி மோதல் சோதனையில் சோதிக்கப்பட்ட பிரேசில் பசல்ட் கார், நான்கு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பாதசாரிகளுக்கான பாதுகாப்பு, சீட் பெல்ட் ரிமைண்டர்கள், ISOFIX குழந்தை இருக்கைக்கான கொக்கிகள், காரில் அதிக சுமைகள் ஏற்றப்பட்டது & சீட் பெல்ட் அணியாதது குறித்த எச்சரிக்கைகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
ஆனால், இந்திய பசல்ட் காரில் மத்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலால் ஆறு ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன. இது பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இந்திய மாடலில் உள்ள கூடுதல் ஏர்பேக்குகள், அதன் சிறந்த பாரத் என்சிஏபி மதிப்பெண்ணுக்கு முக்கிய பங்களித்துள்ளன.

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பயணிகள் பாதுகாப்புப் பிரிவில், பசல்ட் 15.75 புள்ளிகள் உடன் 39% மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கான பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஆனால் ஓட்டுநரின் மார்பு பகுதி ஓரளவிற்கே பாதுகாக்கப்படுவதாகவும் லத்தீன் கிராஷ் டெஸ்ட் குழு தெரிவித்துள்ளது.
மேலும், மற்ற பயணிகளின் மார்பு பகுதிக்கும் பலவீனமான பாதுகாப்பே கிடைப்பதாகவும் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு, சீட் பெல்ட் அணியாதது குறித்த எச்சரிக்கும் கருவியின் குறைவான செயல்திறன் முக்கிய காரணம் ஆகும். கார் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் கால் எலும்புகளுக்கு போதுமான பாதுகாப்பு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், காரின் பாடி ஷெல் நிலையற்றதாக மதிப்பிடப்பட்டு, மேலும் சுமைகளைத் தாங்கும் திறனற்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பக்கவாட்டு மோதல் சோதனையில், பசல்ட் காரின் சிறப்பான செயல்பாட்டினால், பயணிகளின் தலை, வயிறு, மார்பு மற்றும் இடுப்புக்கு நல்ல பாதுகாப்பு கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். "விப்லாஷ்" (Whiplash) சோதனையில் கழுத்துக்கு ஓரளவு பாதுகாப்பு கிடைத்துள்ளது. பக்கவாட்டுத் தலைப் பகுதிக்கான ஏர்பேக்குகள் காரில் வழங்கப்படாததால், கம்பத்தின் மீதான பக்கவாட்டு மோதல் சோதனை நடத்தப்படவில்லை.

குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில், பசல்ட் 28.59 புள்ளிகள் உடன் 58% மதிப்பெண்ணை பெற்றுள்ளது. 3 வயது மற்றும் 1.5 வயது குழந்தை டம்மிகளுக்கு கார் நல்ல பாதுகாப்பை வழங்கியது. மேலும், காருடன் பொருத்தப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேகமான இருக்கை முன்பக்க மோதல் சோதனைகளின் போது குழந்தை டம்மியின் தலை வெளியே தள்ளப்படுவதைத் வெற்றிகரமாக தடுத்தது.
இருப்பினும், பக்கவாட்டு மோதல் சோதனைகளின் போது, 3 வயது குழந்தை டம்மியின் தலை வாகனத்தின் உட்புறத்துடன் மோதுவது கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல், குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரேசில் பசல்ட் காரில் வழங்கப்படும் சில தொழிற்நுட்பங்கள் அதுகுறித்த சோதனைகளில் தோல்வியடைந்தன. மேலும், காரில் ஏர்பேக் இணைப்பை துண்டிக்கும் ஸ்விட்ச் இல்லை.
மேலும், பின்புறம் நோக்கிய குழந்தைகள் இருக்கைகளுக்கான ஏர்பேக் அலார்ட் அதன் அத்தியாவசியமான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்று லத்தீன் என்சிஏபி குறிப்பிட்டுள்ளது. பாதசாரிகள் மற்றும் சாலைப் பயனாளர்கள் பாதுகாப்புப் பிரிவில், சிட்ரோயன் பசல்ட் 25.62 புள்ளிகள் உடன் 53% மதிப்பெண்ணை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிட்ரோன் பசல்ட் காரின் அதே CMP பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டாலும், பிரேசிலில் தயாரிக்கப்படும் பசல்ட் பூஜ்ஜிய மதிப்பீடுகள் உடன் பாதுகாப்பு செயல்திறனில் மிகவும் பின்தங்கி இருப்பது ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏர்பேக்குகள் எந்தவொரு காருக்கும் எந்த அளவிற்கு முக்கியமானவை என்பதற்கு இவ்வாறான சோதனை முடிவுகளே சாட்சியாக அமைகின்றன.


Click it and Unblock the Notifications









