கார் பார்க்க தான் சைஸில் சின்னது... முழு பெட்ரோல் டேங்கை காலி பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்!!
சிட்ரோன் (Citroen), உலகளவில் பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனம். இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன்பு நுழைந்த சிட்ரோன் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்த கார், சிட்ரோன் சி3 (C3) ஆகும்.
காம்பெக்ட்டான ஹேட்ச்பேக் (Hatchback) காராக, குறைந்த விலையில் சி3 அறிமுகம் செய்யப்பட்டதால் இந்தியர்களை இந்த கார் வெகுவாக கவர்ந்திழுக்கும் என சிட்ரோன் மிகவும் நம்பியது. ஆனால், விற்பனை எண்ணிக்கையோ வேறு விதமாக காட்டுகிறது. இருந்தாலும் மனம் தளராத சிட்ரோன் நிறுவனம், சி3 காரில் சமீபத்தில் டார்க் எடிசனை அறிமுகம் செய்ததது.

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதன் கார்களில் டார்க் எடிசன்களை அறிமுகம் செய்து வருகிறது. சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் (C5 Aircross), பசால்ட் (Basalt) கார்களில் டார்க் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சி3 காரிலும் சமீபத்தில் டார்க் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் கருப்பு நிறத்திலான கலர் ஆப்ஷன் சிட்ரோன் சி3 காருக்கு வழங்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.
இந்த நிலையில், சி3 காரில் தற்போது புதியதாக இரு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று, அட்ஜெஸ் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் (Headrest) ஆகும். காருக்குள் முன் இருக்கைகளில் தேவைக்கேற்ப அட்ஜெஸ் செய்யக்கூடிய தலையணைகளை இனி சி3 காரின் மிட் மற்றும் டாப் வேரியண்ட்களில் பெறலாம். மற்றொரு புதிய வசதி என்னவென்றால், 45 லிட்டர்கள் கொள்ளளவில் பெரிய எரிபொருள் டேங்க் ஆகும்.

இதற்கு முன்பு வரையில் 30 லிட்டர்கள் கொள்ளளவிலான எரிபொருள் டேங்க் சி3 காரில் வழங்கப்பட்டு வந்தது. இந்த மாற்றம், சி3 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கான பெட்ரோல்/ டீசல் எரிபொருள்களில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. இதனால், இன்னும் சில காலத்திற்கு பெட்ரோல்/ டீசல் விலைகள் பெரியதாக அதிகரிக்கப்படும் சூழல் ஏற்படாது என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், எத்தனால் உடன் கலக்கப்பட்ட பெட்ரோல்/ டீசலை பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றை ஓரிடத்தில் அதிக கொள்ளளவில் சேமித்து வைக்கவும் முடிகிறது. எரிபொருள் உடன் 20% எத்தனால் கலந்து பயன்படுத்துவதன் மூலமாகவே காரின் எரிபொருள் டேங்கின் கொள்ளளவை அதிகரிக்க முடிந்துள்ளதாக சிட்ரோன் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, சி3 காரில் டேங்கை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக செல்லக்கூடிய தொலைவும் அதிகமாக இருக்கும்.

இந்த புதிய அப்டேட்கள் உடன் சிட்ரோன் சி3 காரில் 'ஃபீல்' (Feel) என்கிற புதியதாக ஒரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபீல் (ஆப்ஷ்னல்) (Feel (O)) என்கிற பெயரில் மட்டுமே இதற்குமுன் ஒரு வேரியண்ட் இருந்த நிலையில், தற்போது ஃபீல் என ஒரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை குறைவான லைவ் (Live) வேரியண்ட்டிற்கும், ஃபீல் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டிற்கும் மத்தியில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஃபீல் வேரியண்ட்டில் ரிமோட் கீலெஸ் எண்ட்ரீ, பின்பக்க பவர் விண்டோஸ், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ORVM-கள், முன்பக்கத்தில் இரு ஏர்பேக்குகள், எல்இடி டிஆர்எல்-கள், ரூஃப் ரெயில்கள், ஸ்பேர் சக்கரம் மற்றும் சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க பயணிக்களுக்கான சன் விஸர் உள்ளிட்டவை கிடைக்கும். அதேபோல், சி3 காரின் ஃபீல் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டிலும் புதியதாக பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளில் (ORVMs) டர்ன் இண்டிகேட்டர்கள் கிடைக்கும்.
சிட்ரோன் சி3 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.23 லட்சத்தில் இருந்து ரூ.10.19 லட்சம் வரையில் உள்ளன. புதிய வசதிகள் மற்றும் ஃபீல் வேரியண்ட்டை தவிர்த்து, சிட்ரோன் சி3 காரின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. சி3 காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என இரு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்கள் அளவிற்கு சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவிலான சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டில்லை. இதன் காரணமாகவே குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் போதிலும் சி3 காரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை. புதிய டார்க் எடிசனின் அறிமுகத்திற்கு பிறகாவது சிட்ரோன் சி3 காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









