மார்க்கெட்டுக்கு வந்ததே தெரியல... கார் அறிமுகமாகி அதற்குள் 1 வருஷம் ஆகிடுச்சா?
சிட்ரோன் (Citroen) நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டில் சரியாக இதே செப்டம்பர் மாதத்தில் பசால்ட் (Basalt) என்கிற கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி (SUV) ரக கார் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து கர்வ் (Curvv) என்கிற கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட இருந்ததால், அதற்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனம் பசால்ட்டை அறிமுகம் செய்தது.
டாடா கர்வ் காருக்கு சில நாட்களுக்கு முன்பே சிட்ரோன் பசால்ட் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்தியாவின் முதல் கூபே-ஸ்டைல் எஸ்யூவி காராக பசால்ட் விளங்குகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் கார்களின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிட்ரோன் பசால்ட் ஆனது அதனை காட்டிலும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் (C5 Aircross) காரை போன்று பசால்ட் காரும் இந்திய மார்க்கெட்டில் தோல்வியைடந்த கார் என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், பசால்ட் காரின் விற்பனையை எப்படியாவது அதிகப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கும் சிட்ரோன் நிறுவனம் அந்த வகையில் தற்போது பசால்ட் எக்ஸ் (Basalt X) என்கிற புதிய காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
புதிய சிட்ரோன் பசால்ட் எக்ஸ் கார் மொத்தம் இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிளஸ் மற்றும் மேக்ஸ் என்பன அந்த இரு வேரியண்ட்கள் ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.95 லட்சத்தில் இருந்து ரூ.12.89 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
பசால்ட் எக்ஸ் காரின் தோற்றத்தை பொறுத்தவரையில், இது வழக்கமான பசால்ட் காரில் இருந்து சில வேறுப்பாடுகளை கொண்டதாக உள்ளது. கூபே-ஸ்டைல் எஸ்யூவி என்பதை மேலும் வலுப்படுத்தும் விதமாக பசால்ட் எக்ஸ் காரின் தோற்றத்தை சிட்ரோன் வடிவமைத்துள்ளது. கார் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்க, காரின் முன்பக்கத்தில் சிவப்பு நிற ஹைலைட்களை பார்க்க முடிகிறது.
இதற்கேற்ப காரின் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் இரட்டை நிறங்களில் உள்ளன. இருப்பினும், அலாய் சக்கரங்களின் டிசைனில் சிட்ரோன் பெரியதாக மாற்றங்களை கொண்டுவரவில்லை. காருக்கு பின்பக்கத்தில் 'பசால்ட் எக்ஸ்' என்கிற முத்திரையை பார்க்க முடிகிறது. இவ்வாறு, காருக்கு வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை காட்டிலும் பசால்ட் எக்ஸ் காரின் உட்பக்கத்தில்தான் முக்கியமான அப்டேட்களை சிட்ரோன் கொண்டுவந்துள்ளது.
அவற்றுள் முக்கியமானது, 'கரா' (Cara) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உடன் செயல்படும் திரை ஆகும். இதன் மூலமாக, காரில் எரிபொருள் எந்த அளவிற்கு உள்ளது? எரிபொருள் தீர்ந்துப் போகும் பட்சத்தில் அருகில் பெட்ரோல் பங்க் எங்கு உள்ளது? என்பது உள்ளிட்ட விபரங்களை வரைப்படம் வாயிலாக மட்டுமின்றி, குரல் வாயிலாகவும் பெறலாம்.
புதிய பசால்ட் எக்ஸ் காரின் ஒட்டுமொத்த கேபின் ஆனது வழக்கமான பசால்ட் காரின் கேபினை காட்டிலும் மேம்பட்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்டாண்டர்ட் பசால்ட் காரின் உட்புற கேபின் முழுவதுமாக வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது. அதுவே, புதிய பசால்ட் எக்ஸ் காரின் கேபின் கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கலந்த கலவையாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பசால்ட் கார்களின் விற்பனையை அதிகரிக்க சிட்ரோன் நிறுவனமும் என்னென்ன முயற்சிகளையோ மேற்கொண்டு பார்க்கிறது. ஆனால், பெரியதாக எதுவும் நடந்த பாடில்லை. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பசால்ட் எக்ஸ் காரின் அறிமுகத்திற்கு பிறகாவது சிட்ரோன் பசால்ட் கார்களின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








