ரோட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கும் ஹூண்டாய் கார்! கஸ்டமர்ஸ் எல்லாரையும் மேக்னெட் மாதிரி ஈர்க்குது!
இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், செடான் (Sedan) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை காட்டிலும் நிமிர்ந்த தோற்றத்தை கொண்டிருப்பதால் எஸ்யூவி கார்களை கடந்த சில வருடங்களில் மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். மார்க்கெட்டில் எஸ்யூவி கார்கள் பல விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், காம்பெக்ட் (Compact) எஸ்யூவி கார்கள் ஆகும். 4.2 மீட்டரில் இருந்து 4.4 மீட்டர் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள், காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த வகை கார்கள் இந்தியாவில் தற்சமயம் 14 விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இதில் 13 காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல்கள் மட்டுமே கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன. ஒரு யூனிட் கூட விற்பனையாகாத அந்த ஒரு காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல் என்ன என்பதையும், கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 42 ஆயிரத்து 919 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 39 ஆயிரத்து 727 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆனது 8.03%, அதாவது 3,192 யூனிட்கள் அதிகரித்துள்ளன.
ஏனெனில், அந்த சமயத்தில் 11 காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருந்தன. டாடா கர்வ், மஹிந்திரா பிஇ 6, சிட்ரோன் பசால்ட் கார்கள் 2024 ஏப்ரல் மாதத்திற்கு பிறகே மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. 2024 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரலில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை அதிகரித்து இருந்தாலும், கடந்த 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஏனெனில், கடந்த மார்ச் மாதத்தில் 51 ஆயிரத்து 416 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை ஆனது 16.53% குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், சில காம்பெக்ட் எஸ்யூவி கார்களை தவிர்த்து இந்தியாவில் பிரபலமான அனைத்து காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனையும் மார்ச்சை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளன.
வழக்கம்போல், கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காராக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 16 ஆகும். அதுவே, 2024 ஏப்ரலில் 15 ஆயிரத்து 447 ஆகும்.
கிரெட்டா கார்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு, கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா இவி எலக்ட்ரிக் கார் (Electric Car) முக்கியமான காரணம் ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் அனைத்தின் விற்பனையும் கணிசமாக குறைந்து வந்தாலும், கிரெட்டா கார்கள் விற்பனை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட நம்பர் ஒன் கார், கிரெட்டா ஆகும். ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,043 கிரெட்டா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்கும் 3இல் ஒருவர் நிச்சயமாக கிரெட்டா காரை தேர்வு செய்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் வரிசையில் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகும். ஆனால், விற்பனை எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள கிரெட்டாவுக்கும், 2வது இடத்தில் உள்ள கிராண்ட் விட்டாராவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கிராண்ட் விட்டாரா கார்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 154 ஆகும். 2024 ஏப்ரல் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான கிராண்ட் விட்டாரா கார்களை தான் மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது என்றாலும், கடந்த மார்ச் மாதத்தில் 10 ஆயிரத்து 418 கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வரிசையில் 3வது இடத்தில் கியா செல்டோஸ் (Kia Seltos) 6 ஆயிரத்து 135 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. செல்டோஸ் கார்கள் விற்பனையில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் மாதத்திற்கு மாதம் செல்டோஸ் கார்கள் விற்பனை எண்ணிக்கை 100- 200 யூனிட்கள் குறைந்துக் கொண்டே வருகிறது. 2024 ஏப்ரலில் 6 ஆயிரத்து 734 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) 4 ஆயிரத்து 642 யூனிட்கள் விற்பனை உடன் இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. 2024 ஏப்ரலில் 3 ஆயிரத்து 252 ஹைரைடர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், 2025 மார்ச்சில் 5 ஆயிரத்து 286 ஹைரைடர் கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் டாடா கர்வ் (Tata Curvv) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,149 மற்றும் 1,155 ஆகும். இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ளவை ஆயிரம் யூனிட்கள் கூட விற்பனை ஆகாதவை ஆகும். 7வது, 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ஹோண்டா எலிவேட் (935), எம்ஜி இசட்.எஸ் இவி (864), ஸ்கோடா குஷாக் (783) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (550) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், 337 மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் கார்கள், 133 எம்ஜி அஸ்டர் கார்கள் மற்றும் 66 சிட்ரோன் பசால்ட் கார்களும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனையாகாத காம்பெக்ட் எஸ்யூவி கார், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகும். இந்த லிஸ்ட்டில் முதல் 10 இடங்களுக்குள் நான்கு எலக்ட்ரிக் கார்கள் இருப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


Click it and Unblock the Notifications








