டாப் ஹீரோவாக இருந்தாலும் இது எல்லாம் கொஞ்சம் ஓவர்! காரை ஸ்பெஷலாக உருவாக்கி கொடுக்கும் மஹிந்திரா!
ஜான் ஆப்ரஹாம் (John Abraham), கட்டுமஸ்தான உடலமைப்புடன் பாலிவுட் (Bollywood) சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர். குறிப்பாக, விலைமிக்க பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள்கள் என்றாலே நடிகர் ஜான் ஆப்ரஹாமுக்கு அதிக பிரியம் உண்டு. இதனாலேயே அவரது திரைப்படங்களில் குறைந்தது ஒரு பைக் காட்சியில் ஆவது நடித்துவிடுகிறார். இவரது வீட்டிற்கு சென்று பார்த்தால், டஜன் கணக்கில் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அதேநேரம், பவர்ஃபுல்லான கார்கள் மீதும் ஜான் ஆப்ரஹாமுக்கு ஆர்வம் உண்டு. பைக்காக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி அவை ஆற்றல்மிக்கவை ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடியவர்.
இதனாலேயே, எந்தவொரு கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தை வாங்க நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாராகி வருகிறார். இவருக்காகவே, தார் வாகனத்தில் புதிய 'கருப்பு பதிப்பு' (Black Edition) மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அந்த வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதும் இந்த நடிகர் தான் என கூறப்படுகிறது.

இதுதொடர்பான நிகழ்ச்சி கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது. மும்பையில் பிறந்தவராக இருப்பினும், நடிகர் ஜான் ஆபிரஹாமின் தந்தை பிறந்தது கேரளாவில் ஆகும். அத்தகைய மாநிலத்தில் மஹிந்திரா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஜான் ஆபிரஹாம் உடன் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை கார் வடிவமைப்பு அதிகாரி பிரதாப் போஸ் (Pratap Bose) அவர்களும் கலந்துக் கொண்டார்.
பிரதாப் போஸ் முன்னதாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையவரை நிகழ்ச்சியில் கண்டதும் கைக்குலுக்கி கட்டியணைத்துக் கொண்ட நடிகர் ஜான் அபிரஹாம், புதிய தார் பிளாக் எடிசனின் உருவாக்கத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த புதிய தார் வாகனத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஜான் ஆபிரஹாம் பயன்படுத்தப்படலாம்.

இன்னும் சொல்லப்போனால், தார் பிளாக் எடிசன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அதில் ஒன்றை வாங்க உள்ளதாகவும் இந்த நடிகர் தெரிவித்துள்ளார். ஜான் ஆபிரஹாமுக்கு பிரத்யேகமாக ஒரு தார் ராக்ஸ் வாகனத்தை உருவாக்கி மஹிந்திரா வழங்க உள்ளது. தனது தார் ராக்ஸ் வாகனத்தை பிரதாப் போஸ் உடன் இணைந்து ஜான் ஆபிரஹாம் வடிவமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் மஹிந்திரா வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு நட்சத்திரத்தின் ஆர்வம் ஒரு ராக்ஸ்டாரை சக்கரங்களில் சந்திக்கும்போது, அசாதாரணமானதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இந்த இடத்தை பாருங்கள்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. மற்றப்படி இந்த வீடியோவில், நடிகர் ஜான் ஆபிரஹாமின் தார் ராக்ஸ் வாகனம் குறித்த மற்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், தார் ராக்ஸ் வாகனத்தில் புதிய ஒரு ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்ய உள்ளதை கூட மஹிந்திரா இதுவரையில் உறுதியாக தெரிவிக்கவில்லை. மஹிந்திராவில் இருந்து சமீபத்தில்தான், பிரபலமான ஸ்கார்பியோ-என் காரின் புதிய கார்பன் எடிசன் (Carbon Edition) அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோன்றதான கார்பன் அல்லது பிளாக் எடிசன் தார் ராக்ஸ் வாகனத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
இதனால், தார் ராக்ஸ் வாகனத்திலும் புதிய பிளாக் எடிசன் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், நடிகர் ஜான் ஆபிரஹாம் தனக்கான தார் ராக்ஸ் வாகனத்தை பிரத்யேகமானதாக பெறவே விரும்புவார். இதனை மஹிந்திரா நிறுவனமே செய்து கொடுக்க உள்ளது. இதேபோன்றதான பணிகளை சில விஐபி-களுக்காக கடந்த காலங்களில் மஹிந்திரா செய்துக் கொடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) அவர்கள் கடந்த காலங்களில் சிலமுறை தனது மஹிந்திரா காரை பிரத்யேகமானதாக உருவாக்கி கொடுக்கும்படி விரும்பி கேட்டுள்ளார். மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது 5-கதவுகளை கொண்ட பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications









