இரு குழந்தைகளுக்கு தாயான பின் எதுவும் சாதிக்க முடியாதா என்ன... இந்திய பெண்ணை ஃபார்முலா ஒன் அழைக்குது!
புனேவைச் சேர்ந்த 32 வயது டயானா பண்டோல் (Diana Pundole), இரண்டு குழந்தைகளின் தாய் மற்றும் கார் பந்தய வீராங்கனை ஆவார். இந்த நிலையில், உலக அளவிலான ஃபெராரி (Ferrari) பந்தயத் தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.
2025 நவம்பர் மாதம் முதல் துபாய், அபுதாபி, பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஃபார்முலா ஒன் (Formula One) பந்தய களங்களில் நடைபெறும் ஃபெராரி கிளப் சேலஞ்ச் மத்திய கிழக்குத் தொடரில் ஃபெராரி 296 சேலஞ்ச் காரை இந்தியாவின் டயானா பண்டோல் ஓட்ட உள்ளார்.

டயானாவின் மோட்டார் பந்தய வாழ்க்கை 2018ஆம் ஆண்டில், இந்தியாவில் பெண் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ஜேகே டயர் பெண்கள் மோட்டார்ஸ்போர்ட் திட்டத்தின் மூலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து, இந்தியன் டூரிங் கார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வாகன் போலோ கப் போன்ற தேசிய பந்தயங்களில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டில் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த MRF சலூன் கார்ஸ் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றது இவரது மிகப்பெரிய சாதனையாகும். இதில் முன்னணி ஆண் போட்டியாளர்களைத் தோற்கடித்து இவர் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், மோட்டார் பந்தயத்தில் பெண்களுக்கான ஒரு முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

பந்தய களத்திற்கு உகந்த சக்தி வாய்ந்த ஃபெராரி 296 சேலஞ்ச் காரை ஓட்டும் டயானா, ஃபெராரி கிளப் சேலஞ்ச் தொடரில் சவாலான போட்டிகளை எதிர்கொள்ள உள்ளார். மணிக்கு 250 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் இவ்வாறான ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டவும், சர்வதேச தரத்திலான பந்தய களங்களின் தொழிற்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும் தீவிரமான உடல் மற்றும் மனப் பயிற்சி தேவைப்படுகிறது.
ஃபார்முலா ஒன் பந்தயத்தில் முதல் அதிகாரப்பூர்வ சோதனைக்கு முன்னதாக, சிமுலேட்டர் பயிற்சி, உடல் தகுதிப் பயிற்சிகளை இவர் மேற்கொள்ள உள்ளார். அலைன்ட் ஆட்டோமேஷன் மற்றும் ஃபெராரி புது டெல்லி போன்ற ஸ்பான்சர்களின் ஆதரவுடன், பந்தயத்தின் மீதான தனது ஆர்வத்திற்கு மறைந்த தனது தந்தையின் ஊக்கமே காரணம் என்று டயானா கூறுகிறார்.

2026 ஏப்ரல் வரை மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் இந்த புதிய கார் பந்தய அத்தியாயத்தில் பங்கேற்பதன் மூலம், பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த மோட்டார்ஸ்போர்ட் துறையில் டயானா பண்டோல் தடைகளை உடைத்துள்ளார். இந்தியாவில் இதுவரையில் இவர் பங்கேற்ற பந்தயங்களில் ஓட்டிய வாகனங்களை விட, ஃபெராரி 296 சேலஞ்ச் கார் நிச்சயம் ஒரு மேம்பட்ட தேர்வாக இருக்கும்.
இது, சாலைகளில் ஓட்டும் 296 ஜிடிபி காரை அடிப்படையாகக் கொண்டு, தொழிற்சாலையிலேயே பந்தயத்திற்காக உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். ஃபெராரி 296 சேலஞ்ச் காரில், இரட்டை டர்போ வி6 என்ஜின் பொருத்தப்படுகிறது. மேலும், சிறந்த காற்றழுத்தப் பிடிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஏரோடைனமிக் பாடிவொர்க் அம்சமும் இதில் உள்ளது. ஒவ்வொரு பந்தயச் சுற்றிலும் ஓட்டுநரின் செயல்திறனை ஃபெராரி பொறியாளர்கள் பகுப்பாய்வு செய்ய உதவும் டேட்டா-லாக்கிங் சிஸ்டம்கள் மற்றும் டெலிமெட்ரி தொழில்நுட்பமும் இந்த காரில் இணைக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டயானா பண்டோலின் இந்த பங்கேற்பு ஆனது சர்வதேச மோட்டார் பந்தயத்தில் இந்தியாவிற்கும், பெண் பந்தய வீரர்களுக்கும் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், இவரது ஃபார்முலா ஒன் கார் பந்தய ஈடுப்பாடு ஆனது கார் பந்தயங்களில் பாலின ஆதிக்கத்தை மறுவரையறை செய்வதைக் காட்டுகிறது. இவரது பயணம் பல இந்தியப் பெண்களுக்கு மோட்டார் பந்தயம் மற்றும் பிற துறைகளில் தங்கள் கனவுகளைத் தொடர உத்வேகம் அளிக்க கூடியதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









