மக்களிடம் எலக்ட்ரிக் கார் வாங்கும் ஆர்வம் குறையுதா? வெளிச்சம் போட்டு காட்டும் சேல்ஸ் ரிப்போர்ட்
உலகளவில் இந்தியா மிக பெரிய கார் சந்தை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதனாலேயே எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அதிகம் விற்பனையாகும் மற்றும் பயன்படுத்தப்படும் நாடாக நம் இந்தியா விளங்கும் என கூறப்படுகிறது. அதற்கான படிநிலைகளை நாம் ஒவ்வொன்றாக கடந்தப்படி வந்துக் கொண்டிருக்கிறோம். அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-க்கு மற்றும் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாகள் (Auto Richshaw)-க்கு தான் தற்போதைக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகப்படியான தேவை நிலவி வருகிறது. அதற்காக எலக்ட்ரிக் கார்கள் விற்பனையை நம்மால் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பல இலட்சக்கணக்கில் கார்கள் விற்பனையாகுகின்றன. கடந்த 2024ஆம் ஆண்டிலும் அவ்வாறு ஏறக்குறைய சுமார் 40 லட்சம் கார்கள் மக்களால் வாங்கப்பட்டுள்ளன. இதில் நமது கவனத்தை ஈர்ப்பது எதுவென்றால், இந்த 40 லட்சத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்கள் அடங்குவது ஆகும்.
கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 966 ஆகும். 2024இல் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை மட்டும் 2.5% ஆகும். இந்தியாவில் ஒரு வருடத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடப்பது இதுவே முதல்முறை ஆகும்.

இதற்கு முந்தைய 2023ஆம் ஆண்டில் 90 ஆயிரத்து 266 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டதே இதற்குமுன் அதிகப்பட்சமாக இருந்தது. இந்த வகையில் பார்த்தால், 2023ஆம் ஆண்டை காட்டிலும் 2024இல் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 19% அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு உள்பட ஒவ்வொரு வருடமும் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகரித்து வருகிறது.
ஆனால், கடந்த 2024இல் அந்த அதிகரிப்பு சற்று குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், 2022ஆம் ஆண்டில் 47 ஆயிரத்து 639 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2023இல் அதனை காட்டிலும் டபுள் மடங்கு அதிக எலக்ட்ரிக் கார்கள் விற்கப்பட்டன. 2021ஆம் ஆண்டில் வெறும் 14 ஆயிரத்து 690 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

2020, 2019 மற்றும் 2018ஆம் வருடங்களில் முறையே 4774, 2019 மற்றும் 1230 எலக்ட்ரிக் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்தியாவில் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார், மஹிந்திரா, சிட்ரோன், ஹூண்டாய் மற்றும் கியா என 6 கார் நிறுவனங்களில் இருந்து எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அதிகப்பட்டமாக, டாடா மோட்டார்ஸில் இருந்து 66 ஆயிரத்து 561 எலக்ட்ரிக் கார்கள் கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தை பிடித்திருப்பினும், உண்மையில் 2023ஆம் ஆண்டை விட டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம், எம்ஜி மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த லிஸ்ட்டில், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, வால்வோ போன்ற லக்சரி கார் நிறுவனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









