டாடாவை சுத்துப்போடும் எம்ஜி & மஹிந்திரா! இன்னும் கொஞ்ச நாளில் எல்லாமே மாற போகுது!!
மற்ற உலக நாடுகளை போல, இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் 2-வீலர்கள் அளவிற்கு இல்லாமல், எலக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை கொஞ்சம் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனையான எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இந்தியாவில் நடந்து முடிந்த 2025 ஜூன் மாதத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 178 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த மே மாதத்தில் 12 ஆயிரத்து 304 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது, இந்தியாவில் மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 874 எலக்ட்ரிக் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்திலாவது பரவாயில்லை, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் பாதி எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2024 ஜூனில் 7 ஆயிரத்து 323 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே இந்தியாவில் ஒட்டுமொத்தமாகவே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
கடந்த ஆண்டு ஜூன் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூனில் 5 ஆயிரத்து 855 எலக்ட்ரிக் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல், கடந்த ஜூன் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முதலிடத்தை பிடித்து இருப்பினும், எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் டாடாவை மிக நெருக்கமாக நெருங்கி வந்துவிட்டது.

2020ஆம் ஆண்டில் இருந்தே எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஒவ்வொரு வருடத்திலும் மற்ற கார் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் ஆயிரக்கணக்கில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கிறது.
இதே நிலைதான் இப்போதும் தொடர்கிறது என்றாலும், டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி மெதுவாகி உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 4 ஆயிரத்து 594 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 114 எலக்ட்ரிக் கார்கள் அதிகமாக 4 ஆயிரத்து 708 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2025 மே மாதத்தில் 4 ஆயிரத்து 351 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. இவ்வாறு டாடாவின் வளர்ச்சி மெதுவாகி இருப்பதற்கு ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் முக்கியமான காரணமாகும். எம்ஜி மோட்டாரில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் 3 ஆயிரத்து 972 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டாடாவுக்கும் எம்ஜிக்கும் இடையே 736 கார்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. 2024 ஜூன் மாதத்தில் 1,480 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி மோட்டார் விற்பனை செய்திருந்தது. இதேபோல், 2024 ஜூனில் வெறும் 486 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த மஹிந்திரா நிறுவனம், 2025 ஜூனில் 3 ஆயிரத்து 29 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.
| OEM | June 2025 | May 2025 | June 2024 | MoM% | YoY% |
| Tata Motors | 4,708 | 4,351 | 4,594 | 8.21% | 2.48% |
| MG Motor | 3,972 | 3,765 | 1,480 | 5.50% | 168.38% |
| Mahindra | 3,029 | 2,632 | 486 | 15.08% | 523.25% |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் இந்த போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்துள்ள டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனங்களை மட்டும் தான் கவனிக்கிறோம். ஆனால், இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தை பிடித்துள்ள மஹிந்திரா நிறுவனத்துக்கு தான் வரும் நாட்களில் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய பிரகாசமான வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது. ஆதலால், இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை மஹிந்திரா பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications









