இந்தியால இவ்ளோ மைலேஜ் தரும் டீசல் கார்களும் விற்பனைக்கு கிடைக்குதா! பட்டியல்ல இருப்பது எல்லாமே எஸ்யூவி கார்கள்
இந்தியாவில் இப்போதும் டீசல் கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதைக் கருத்தில் கொண்டே வாகன உற்பத்தியாளர்கள் சிலர் நாட்டில் டீசல் கார்களுக்கு முக்கியத்தும் வழங்கி, அதை சற்றே அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த பதிவில், சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் டீசல் கார்களிலேயே அதிகம் மைலேஜ் தரும் டாப் 10 கார்களின் லிஸ்ட்டையே தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக, டீசல் எஸ்யூவி கார்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம்.
அந்த கார்கள் லிட்டர் ஒன்றிற்கு எவ்வளவு மைலேஜ் தரும்? என்ன மாதிரியான எஞ்சினைத் தாங்கி இருக்கின்றன? அதன் திறன் வெளிப்பாடு, சிறப்புகள் மற்றும் விலை விபரங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஜீப் காம்பஸ் (Jeep Compass): ஜீப் காம்பஸ் இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், நாம் பார்க்க இருக்கும் இந்த பட்டியலில் இருப்பதிலேயே குறைவான மைலேஜை தரும் டீசல் கார் மாடல் இதுவே ஆகும். ஜீப் காம்பஸ் டீசல் எஞ்சின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.
மேனுவல் லிட்டர் ஒன்றிற்கு 17.10 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் 14.90 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 18.99 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 32.41 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மோட்டாரே இதில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo): ஜீப் காம்பஸ் கார் மாடலுக்கு அடுத்தபடியாக மஹிந்திராவின் இந்த தயாரிப்பே இருக்கின்றது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இதில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 17.29 கிமீ வரையில் மைலேஜ் தரும்.
1.5 லிட்டர் டீசல் மோட்டாரே இதில் வழங்கப்படுகின்றது. இது 100 பிஎஸ் மற்றும் 260 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதன் தொடக்க விலை ரூ. 9.95 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 12.15 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.
ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலாக அல்கஸார் இருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 14.99 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 21.70 லட்சம். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த கார் மாடலின் டீசல் ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு ஆப்ஷன்களையும் ஹூண்டாய் வழங்குகின்றது. இதன் மேனுவல் லிட்டர் ஒன்றிற்கு 20.40 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் லிட்டர் ஒன்றிற்கு 18.1 கிமீ மைலேஜையும் வழங்கும். எஞ்சினைப் பொருத்த வரை 1.5 லிட்டர் டீசல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்ச 116 பிஎஸ் வரையிலான ஆற்றலை மட்டுமே வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
கியா செல்டோஸ் (Kia Seltos): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் டீசல் ஆப்ஷனிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதன் மேனுவல் ஆப்ஷன் 20.70 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் லிட்டர் ஒன்றிற்கு 20.70 கிமீ மைலேஜையும் வழங்கும்.
116 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.5 லிட்டர் மோட்டாரே இந்த காரில் வழங்கப்படுகின்றது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே டீசல் மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. செல்டோஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ. 11.13 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
கியா சிரோஸ் (Kia Syros): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக சிரோஸ் மாறி வருகின்றது. இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் மோட்டாரையே கியா வழங்குகின்றது. இது 116 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. இதிலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றது. சிரோஸ் கார் மாடலை இந்தியாவில் ரூ. 9 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): இந்த கார் மாடல் மஹிந்திராவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக இப்போது மாறி வருகின்றது. இதற்கு கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை அக்கார் தாங்கி இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. 117 பிஎஸ் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் மோட்டாரையே இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்குகின்றது.
இந்த மோட்டாருடன் வழங்கப்படும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 20.60 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் 21.20 கிமீ மைலைஜேயும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 7.99 லட்சம் தொடங்கி ரூ. 15.57 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): ஹூண்டாய் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். இந்த கார் மாடலின் டீசல் மோட்டார் 19.10 கிலோ மீட்டர் முதல் 21.80 கிலோ மீட்டர் வரையில் மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனே இதில் வழங்கப்படுகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ரூ. 11.11 லட்சம் தொடங்கி ரூ. 20.50 லட்சம் என்கிற விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவில் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இது பெற்றிருக்கின்றது. இந்த கார் மாடலில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் பலதரப்பட்ட ஆப்ஷன்களை டாடா மோட்டார்ஸ் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதன் டீசல் ஆப்ஷனில் 113 பிஎஸ் மற்றஉம் 260 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் 1.5 லிட்டர் மோட்டாரே வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 23.23 கிமீ முதல் 24.08 கிமீ வரையில் மைலேஜ் தரும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. நெக்ஸான் காரை ரூ. 8 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே வாங்கிக் கொள்ள முடியும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
கியா சொனெட் (Kia Sonet): இந்த பட்டியலில் மிக அதிகம் மைலேஜ் தரும் டீசல் கார்களில் இரண்டாவது இடத்தை இந்த கார் மாடலே பிடித்திருக்கின்றது. இது லிட்டர் ஒன்றிற்கு 19 கிமீ முதல் 24.10 கிமீ வரை மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ரூ. 8 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இதன் டீசல் மோட்டாருடன் வழங்கப்படுகின்றது.
ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): இந்தியாவின் நம்பர் 1 மைலேஜ் தரும் டீசல் கார் ஆப்ஷன் இதிலேயே கிடைக்கின்றது. 24.20 கிமீ மைலேஜை ஒரு லிட்டர் டீசலுக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்படுகின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 116 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.94 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 13.62 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்ட மைலேஜ் விபரம் அராய் சான்றின்படி வழங்கிய புள்ளி விபரங்கள் ஆகும். இந்தியாவில் டீசல் கார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் பலர் அதற்கு முக்கியத்துவம் வழங்கி வாங்கிக் கொண்டிருக்கின்றது. இது பெருத்த ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கின்றது. துணிச்சலுடன் டீசல் காரை விரும்பி வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் விதமாக இந்த பதிவை வழங்கி இருக்கின்றோம்.


Click it and Unblock the Notifications








