இதுக்கு அப்புறம் எத்தனை பேர் வேணுமானாலும் வாங்கலாம்... ஆனால் இவர்தான் முதல் கார் கஸ்டமர்!
லம்போர்கினி (Lamborghini) கார்களுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் லம்போர்கினி கார்களுக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உள்ளது. 1960ஆம் காலக்கட்டத்தில் இருந்தே செயல்பட துவங்கிவிட்டாலும், லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் நேரடியாக கால் பதித்தது 2008ஆம் ஆண்டில் ஆகும். அதாவது, 2008ஆம் ஆண்டில் இந்தியாவில் அதன் முதல் டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) டெல்லியில் லம்போர்கினி திறந்தது.
சமீபத்தில் முதல் டெஸ்லா கார் (Tesla Car) ஷோரூம் திறக்கப்பட்ட போது எந்த அளவிற்கு நாடு முழுவதும் கவனிக்கப்பட்டதோ, அதேபோன்று லம்போர்கினி நேரடியாக இந்தியாவில் வணிகத்தை துவங்கிய போதும் அது நாடு முழுக்க கவனத்தை பெற்றது. இதன் பின்னரே, வெளிநாட்டில் இருந்து அதிக பணத்தை செலவு செய்து லம்போர்கினி காரை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்கிற நிலைமை மாறி, இந்திய பணக்காரர்கள் பலர் டெல்லி ஷோரூம் வாயிலாக லம்போர்கினி காரை வாங்க ஆரம்பித்தனர்.

அதன்பின், 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் 2வது டீலர்ஷிப் ஷோரூமை மும்பையில் நிறுவிய லம்போர்கினி நிறுவனம், இதன் மூலமாக இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தியது. இருப்பினும், தென்னிந்தியாவில் லம்போர்கினி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்ட லம்போர்கினி நிறுவனம் மும்பையை காட்டிலும் இன்னும் கீழே உள்ள முக்கிய நகரத்தில் மேலும் ஒரு ஷோரூமை திறக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தது.
அந்த முக்கியமான நகரம் சென்னையாக இருக்கலாம் என பலர் யூகித்தாலும், இந்தியாவில் மென்பொருள் புரட்சி தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெங்களூருவில் அதன் மூன்றாவது இந்திய டீலர்ஷிப் ஷோரூமை 2014ஆம் ஆண்டில் லம்போர்கினி திறந்தது. லம்போர்கினி நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான ஸ்டீபன் விங்கெல்மன் பெங்களூருவுக்கு நேரில் வந்து ஷோரூமை திறந்து வைத்தார்.

தாமதமாக திறக்கப்பட்டாலும், இந்தியாவில் லம்போர்கினிக்கு 50% விற்பனையை கொடுக்கும் ஷோரூமாக பெங்களூரு ஷோரூம் விளங்குகிறது. இருப்பினும், இப்போதுதான் பெங்களூருவில் உள்ள லம்போர்கினி ஷோரூமில் இருந்து முதல் லம்போர்கினி உருஸ் (Urus) கார் வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில், பெங்களூரு ஷோரும் ஆனது லம்போர்கினி நிறுவனத்திற்கு விற்பனையை அதிகம் வழங்கும் ஷோரூம் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். அது மட்டுமில்லாமல், உருஸ் ஆனது உலகளவில் குறுகிய காலத்திலேயே பலத்த வரவேற்பை பெற ஆரம்பித்த லம்போர்கினி கார் ஆகும். பெங்களூரு லம்போர்கினி ஷோரூமில் முதல் உருஸ் காரை பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் குமார் அஷியா டெலிவிரி பெற்றுள்ளார்.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் சொகுசு எஸ்யூவி காரான உருஸில் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 650 எச்பி மற்றும் 850 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 305கிமீ வேகத்தில் உருஸ் காரில் செல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவிலேயே லம்போர்கினி உருஸ் கார் ஆனந்த் குமார் அஷியாவிடம் மட்டும்தான் உள்ளது என இதற்கு அர்த்தமில்லை. ஏனெனில், சிலர் மும்பை மற்றும் டெல்லி ஷோரூம் வாயிலாக உருஸ் காரை வாங்கி ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இந்த அளவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படும் உருஸ் ஆனது ஸ்டைலிஷான மற்றும் ஆற்றல்மிக்க லம்போர்கினி காராக விளங்குகிறது.
Source: Lamborghini Bengaluru Showroom/ Press Release


Click it and Unblock the Notifications









