7+1 சீட்டருடன் விற்பனைக்கு வந்த ஆட்டோ.. காருக்கு பதிலா இதையே வாங்கிடலாம் போல.. விலையும் இவ்ளோ கம்மியா?..
காயத்ரி எலெக்ட்ரிக் வெயிக்கிள் பிரைவேட் லிமிடெட் (Gayatri Electric Vehicle Pvt Ltd), நிறுவனம் இது ஓர் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சா ஒன்றை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு ஆட்டோரிக்சாவிலும் இல்லாத அம்சங்கள் மற்றும் வசதிகள் பலவற்றை இந்த ஆட்டோரிக்சாவில் காயத்ரி எலெக்ட்ரிக் வெயிக்கிள் வழங்கி உள்ளது. மிக முக்கியமாக 7+1 சீட்டர் வசதியை அந்த நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இந்தியாவில் வேறு எந்த ஆட்டோரிக்சாவிலும் இத்தனை சீட்டர் வசதியை நம்மால் காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்தியாவின் முதல் 7+1 சீட்டர் வசதிக் கொண்ட ஆட்டோரிக்சாவாக இதன் வருகை அமைந்துள்ளது. தபாங் மேக்ஸ் எக்ஸ் (Dabang MaxX) எனும் பெயரிலேயே இந்த அதிக இருக்கைகளைக் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்குக் கிடைக்கும்.

சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம் (International Centre for Automotive Technology) சான்றை பெற்ற எலெக்ட்ரிக் ஆட்டோவாகவும் இது உள்ளது. இதன் வாயிலாக அரசின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்ட வாகனம் இது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்களில் இந்த ஆட்டோ சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது.
இந்த ஆட்டோ மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும். இதேபோல், இதில் ஓர் முழு சார்ஜில் 150 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுக்காக 60V\12.6 KW திறன் கொண்ட லித்தியம் அயன் பாஸ்பேட் (Lithium Iron Phosphate) பேட்டரி பேக்கையே தபாங் மேக்ஸ் எலெக்ட்ரிக் ஆட்டோவில் வழங்கி இருக்கின்றனர்.
இதை முழுமையாக சார்ஜ் செய்ய சில ரூபாய்களே ஆகும் என நிறுவனம் தெரிவிக்கின்றது. ஆகையால், குறைந்த செலவில் அதிக லாபத்தை ஆட்டோ டிரைவர்கள் ஈட்ட தபாங் மேக்ஸ் ஓர் சிறந்த ஆட்டோவாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. அதேவேளையில், 7 பேர் வரை ஏற்றிக் கொள்ள முடியும் என்பதால் வழக்கமான ஆட்டோவைக் காட்டிலும் இரட்டிப்பான லாபத்தை இதில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிகின்றது.
குறிப்பாக, ஷேர் ஆட்டோ சர்வீஸ்க்கு உகந்த ஆட்டோவாக இதனை தயார் செய்திருக்கின்றனர். காயத்ரி எலெக்ட்ரிக் வெயிக்கிள் நிறுவனம் பயணிகள் ஆட்டோவை மட்டுமல்ல தன்னுடைய லோடு ஆட்டோ ஒன்றையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த ஆட்டோ சந்தையில் என்ட்ரேகா (Entrega) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதை இரண்டு விதமான வேரியண்டுகளில் வாங்கிக் கொள்ள முடியும். என்ட்ரேகா எச்டி பிளஸ் (Entrega HD+) மற்றும் என்ட்ரேகா எல்டி (Entrega LD) ஆகியவையே அவை ஆகும். இந்த லோடு எலெக்ட்ரிக் ஆட்டோக்களும் அதிக லாபத்தை அதன் பயனாளிகளுக்கு வழங்கும் வகையிலேயே தயார் செய்திருக்கின்றனர்.
700 கிலோ வரையில் லோடை இதில் ஏற்றிச் செல்ல முடியுமாம். அதேபோல், ஓர் முழு சார்ஜில் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதற்காக 60V\210 AH திறன் கொண்ட லித்தியம் அயன் பாஸ்பேட் வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மோட்டாரை பொருத்த வரை 7800W திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே மோட்டாரே பயணிகள் எலெக்ட்ரிக் ஆட்டோவான தபாங் மேக்ஸ் எக்ஸ்-லும் பயன்படுத்தி இருக்கின்றனர். தொடர்ந்து அதிக சரிவான பாதைகளையும் இது திறம்பட சமாளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே காரை வாங்கி டாக்சி பிரிவில் ஓட்டிக் கொண்டிருப்பவர்களின் கவனத்தையும் இந்த மின்சார ஆட்டோக்கள் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் விலையை நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்களையும் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 2.50 லட்சத்திற்கும் குறைவான விலையே இதற்கு நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு குறைவான விலை நிர்ணயிக்கப்படும் எனில் இது விற்பனையில் கார்களுக்கு நிச்சயம் சவால் விடும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








