இதை நாம எதிர்பார்க்கவே இல்லையே... கார் & பைக்குகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி குறைப்புனு நெனைச்சோம்!
ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சரக்கு & சேவை வரிகளில் மாற்றங்களை செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, அனைத்து விதமான ஜிஎஸ்டி வரிகளையும் 5% & 18% என இரண்டே இரண்டு வரையறையின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. சில பொருட்களுக்கு ஜிஎஸ்டியே இல்லாமல் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, சில குறிப்பிட்ட வகை கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%-இல் இருந்து அதிரடியாக 18% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. சிறிய ரக கார்கள், ஹைப்ரீட் கார்கள் (Hybrid Cars) மற்றும் அனைத்து விதமான இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால், குறைந்த விலையிலான வாகனங்களின் விலைகள் மேலும் குறையும் சூழல் உருவாகி உள்ளது.

இதன் விளைவாக, வரும் மாதங்களில் வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. கார்கள் மற்றும் 2-வீலர்கள் மட்டுமில்லாமல், டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டியும் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. கார் & 2-வீலர்கள் ஆட்டோமொபைல் பிரிவின் கீழ் வரும் நிலையில், டிராக்டர்கள் விவசாய பொருட்கள் பிரிவின் கீழ் வருவதால் டிராக்டர்களுக்கு ஏற்கனவே ஜிஎஸ்டி குறைவாகவே வசூலிக்கப்பட்டு வந்தது.
அதாவது, மற்ற வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், டிராக்டர்களுக்கு மட்டும் 12% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில், டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டியும் குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. 12% ஆக இருந்த டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டி வெறும் 5% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த 7% வரி குறைப்பானது அனைத்து விதமான டிராக்டர்களுக்கும் கிடையாது. பின்னால் பொருட்களை வைத்து கொண்டு செல்ல செமி-டிரைலர் (Semi-Trailer) உடன் இணைக்கப்படும் சாதாரணமான டிராக்டர்கள் மற்றும் 1800சிசி என்ஜினை காட்டிலும் அதிக ஆற்றல்மிக்க என்ஜினை கொண்ட டிராக்டர்கள் இந்த 5% ஜிஎஸ்டி-இன் கீழ் வராது.
ஏனெனில், அவற்றிற்கான ஜிஎஸ்டி ஆனது சற்று அதிகமாகும். இவ்வாறான, வழக்கமான டிராக்டர்கள் மற்றும் 1800சிசி+ என்ஜினை கொண்ட டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டி மற்ற கார் & பைக்குகளை போன்று 28% ஆக இருந்த நிலையில், தற்போது அது 18% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல், டிராக்டர்களுக்கான உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டியும் பெரிய அளவில் குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

டிராக்டர்களுக்கான டயர்கள் மற்றும் மற்ற பாகங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றிற்கு ஜிஎஸ்டி பெரிய அளவில் குறைக்கப்பட்டு வெறும் 5% ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜிஎஸ்டி குறைப்புகள் டிராக்டர்களுக்கு மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த மற்ற இயந்திரங்களுக்கும் கொண்டுவரப்பட்டு உள்ளன.
இதன்படி, மண்ணை பதப்படுத்த, சாகுபடிகளை அறுவடை செய்ய, கதிரடித்தல் & பேலர்கள், வைக்கோலை கொண்டு செல்வதற்கான கருவிகள் மற்றும் உரம் தயாரிக்கும் உபகரணங்கள் போன்ற வேளான் சார்ந்த பிற இயந்திரங்களுக்கும் 12%-இல் இருந்து 5% ஆக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரி குறைப்புகள் மூலமாக, இந்த 2025-26 நிதியாண்டில் டிராக்டர்கள் விற்பனை ஆனது 4இல் இருந்து 7% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 7% வரையில் ஜிஎஸ்டி குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளதால், விவசாயம் சார்ந்த வேளாண்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த ஜூலை மாதத்தில் டிராக்டர்கள் விற்பனை ஆனது 8% வரையில் அதிகரித்து இருந்தது. மேலும், டிராக்டர்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சியும் இதன் மூலம் மேம்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









