கார் விலை லட்சக்கணக்கில் குறையுது! தீபாவளிக்கு பட்டாசு, துணி வாங்கற மாதிரி மக்கள் இனி புது கார் வாங்க போறாங்க!
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது, இந்திய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது ஜிஎஸ்டி வரிகள் (GST) குறைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு ஆகும். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரிகள் எவ்வளவு குறையும்? என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த கேள்விக்கு தற்போது நமக்கு அதிகாரப்பூர்வமான பதில் கிடைத்துள்ளது. ஆம், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் (GST Council Meeting) இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கார்கள் (Cars) மற்றும் பைக்குகள் (Bikes) போன்ற வாகனங்களும் அடங்கும். இந்த செய்தியில், கார்கள் மற்றும் பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி எவ்வளவு குறையவுள்ளது? என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் முன்பு, 1,200 சிசி இன்ஜின் திறன் மற்றும் 4,000 மிமீ நீளத்திற்கு மிகாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் கார்கள், பெட்ரோல் ஹைப்ரிட் கார்கள், எல்பிஜி கார்கள் மற்றும் சிஎன்ஜி கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் முன்பு, 1,500 சிசி இன்ஜின் திறன் மற்றும் 4,000 மிமீ நீளத்திற்கு மிகாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல் கார்கள் மற்றும் டீசல் ஹைப்ரிட் கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மூன்று சக்கர வாகனங்களுக்கும் முன்பு 28 சதவீத ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கும் முன்பு 28 சதவீத ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். அது எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மீதான ஜிஎஸ்டி வரி பற்றியது ஆகும்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இது அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும். அதாவது சிறிய எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்கள் மற்றும் சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் என அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் தொடர்ந்து 5 சதவீத ஜிஎஸ்டி வரியே விதிக்கப்படும்.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் முன்பு போல், தொடர்ந்து 5 சதவீத ஜிஎஸ்டி வரியே விதிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை போல், இந்திய மக்களுக்கு முன்கூட்டியே தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளது என்றுதான், இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பை சொல்ல வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால், நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வாகனங்களின் விலை வெகுவாக குறைய போகிறது.
உதாரணத்திற்கு தற்போது ஒரு கார் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதன் விலை 1 லட்ச ரூபாய் குறையும். இதன் காரணமாக வாகனங்களை வாங்க அதிக அளவில் மக்கள் முன்வருவார்கள். எனவே வரும் மாதங்களில் வாகன விற்பனை சூடுபிடிக்க போவது உறுதி. புதிய ஜிஎஸ்டி வரி வரும் செப்டம்பர் 22ம் தேதியில் (September 22) இருந்து அமலுக்கு வரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








