டாடா நானோ போல் குட்டி காரை களமிறக்கும் ஹீரோ! பைக் மாதிரியே குறைவான விலையில் விற்பனைக்கு வரப்போகுது!
இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் புது டெல்லியை (New Delhi) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திகழ்ந்து கொண்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெட்ரோல் மூலமாக இயங்கும் பைக்குகள் (Bikes) மற்றும் ஸ்கூட்டர்கள் (Scooters) மட்டுமல்லாது, மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் (Electric Scooters) விற்பனை செய்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் தனியாக விடா (VIDA) என்ற பிராண்டின் கீழ், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்கிறது.

அதாவது விடா என்பது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிராண்டு ஆகும். இந்த பிராண்டின் கீழ், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கூடிய விரைவில், எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
இத்தாலியின் (Italy) மிலன் (Milan) நகரில் ஒவ்வொரு ஆண்டும் EICMA வாகன கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதன்படி EICMA 2025 வாகன திருவிழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில், விடா நிறுவனம் கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கான்செப்ட் எலெக்ட்ரிக் பைக்குகளை காட்சிக்கு வைத்திருந்தது. மேலும் எலெக்ட்ரிக் கார் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

நெக்ஸ் 3 (NEX 3) என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த எலெக்ட்ரிக் கார், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது 2 பேர் மட்டும் அமர கூடிய வகையிலான மைக்ரோ எலெக்ட்ரிக் கார் ஆகும். டிரைவர், அவருக்கு பின்னால் ஒருவர் அமர கூடிய வகையில் 2 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது அளவில் மிகவும் சிறியதாக இருக்கும்.
நகர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு நெக்ஸ் 3 எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது நகர பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடி வருகிறது. எனவே அங்கு அளவில் பெரிய கார்களில் பயணிப்பது என்பது சிரமமான காரியமாக மாறி விட்டது.
அதற்காக டூவீலர்களில் பயணம் செய்வதும் கூட, ஒரு சிலருக்கு சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாகவே உள்ளது. குறிப்பாக கடும் வெயில் மற்றும் மழை காலங்களில், டூவீலர்களில் பயணம் செய்து சிரமம். இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக டாடா நானோ (Tata Nano) போல், அளவில் சிறிய ஒரு எலெக்ட்ரிக் காரை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நெக்ஸ் 3 எலெக்ட்ரிக் காரின் விலை (Price) மற்றும் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) போன்ற விபரங்கள் எல்லாம், அது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், பைக்குகளை போலவே விலை மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








